மதுரை: குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்த தன்னை தாக்கியது தொடர்பாக பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கார்த்திக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: துறையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த மாதம் துறையூர் சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவை துணைத் தலைவருமான ரவி சங்கரிடம், மக்கள் சார்ந்த கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கச் சென்றேன். அப்போது பேரவை துணைத் தலைவர் ‘யார்டா நீ’ எனக் கேட்டு என்னை உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. நான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியும் பறிக்கப்பட்டது.
நான் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கிருந்த காவலர்கள் என்னிடம் விசாரித்தபோது பேரவை துணைத் தலைவர் தாக்கியதாகத் தெரிவித்தேன். இருப்பினும் காவலர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக ஆவணத்தில் பதிவு செய்தனர்.
மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் இருந்து என்னைக் கட்டாயப்படுத்தி பேரவை துணைத் தலைவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை யாரும் தாக்கவில்லை எனப்பேச வைத்து காணொலியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கூறினார்.
அதற்கு மறுத்த என்னை, பேரவை துணைத் தலைவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் என்ன வேண்டுமானலும் செய்வேன், என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டினார்.
என் குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார். இதனால் அவர் கூறிபடி கூறினேன். அதை காணொலியாகப் பதிவு செய்தனர். வேறு காணொலி எதுவும் சமூக வலைதளத்தில் பதிவிடக்கூடாது என மிரட்டி அனுப்பினர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னைத் தாக்கி மிரட்டியது தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி, துறையூர் எம்எல்ஏவும், பேரவை துணைத் தலைவருமான மு.ரவிசங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி எஸ்பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.