திருவாரூர்: தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பெற்ற தாயை யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதை போல இதையும் கருத வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.
திருவாரூர் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணைவேந்தர் சுலோச்சனா சேகர் வரவேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாகை எம்.பி. வை.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 50 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1053 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பல்துறை கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் விழுமிய அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இந்த நோக்கத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது.
பெண்களின் உயர் கல்விச் சேர்க்கை 2014-15-ம் ஆண்டில் 1.57 கோடியிலிருந்து 2023-24-ம் ஆண்டில் 2.24 கோடியாக, அதாவது 42.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்டம் பெறும் மாணவர்கள், வகுப்பறைகளை விட்டு வெளியேறினாலும், கற்றலை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.
இன்று பெறும் பட்டம், வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுத் தேடலின் தொடக்கம் மட்டுமே. எந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுதந்திரத்தின் நூற்றாண்டை ஒட்டி வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான மற்றும் நிலையான பாரதத்தை உருவாக்கும் விக்சித் பாரத்-2047 என்ற இலக்கை நாடு முன்னெடுத்து வருகிறது. அதை நிறைவேற்றுவதில், இளைஞர்களின் பங்கு இருக்க வேண்டும்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடுகளை தடுப்பதும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். பொதுத் தேர்வு முறையின் நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானவை.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த காவல்துறை இது தொடர்பான குற்றவாளிகள் மீது எந்த ஒரு கருணையும் காட்டக்கூடாது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் போதை பொருட்களை தவிர்ப்பது மட்டுமல்லாது, உங்கள் நண்பர்களும் போதைப்பொருளில் இருந்து விலகி இருக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதால், அதை அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சொந்த நாட்டையும், பெற்ற தாயையும் யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதைப் போல தமிழ்த்தாய் வாழ்த்தையும் மூன்றாவதாக பாடுவதை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடிய பிறகு 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தடுமாறிய ஆளுநர்
பட்டமளிப்பு விழா முடிவடைந்த பின்னர், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் விழா மேடையிலிருந்து பின்புறமாக வெளியேறினர். அப்போது, தரையில் விரித்திருந்த தரைவிரிப்பில் கால் இடறி ஆளுநர் அர்லேகர் கீழே விழுந்தார். உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கி அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டார்.