சென்னை: அரசு சேவைகளை கைபேசி மூலம் நேரடியாக பெற, ரூ.5 கோடியில் வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ரா.குமார் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் ரா.குமார் பேசியதாவது: பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையை குறைக்கும் வகையில் பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500 அரசு சேவைகளை தங்களது கைபேசிகள் மூலம் நேரடியாக பெறுவதற்கு ஏதுவாக ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ அறிமுகப்படுத்தப்படும், ரூ.5 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசுடன் பகிர்ந்து கொள்ளவும், அரசின் திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் வெற்றித் தமிழ்நாடு இணையதளம் ரூ.1 கோடியில் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தயாரிப்புகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் ‘தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான இலவச செயற்கை நுண்ணறிவு சேவைகள்’ என்ற திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் வெற்றி தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.