வெற்றிப் பயண திட்டத்தால் தங்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள்.
தேனி: வெற்றிப் பயண திட்டத்தால் தங்களின் வருவாய் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தேனியில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த அக்.2 முதல் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்களுக்கும் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தனியார் மற்றும் கட்டண பேருந்துகளை புறக்கணித்து வெற்றிப் பயணம் பேருந்துகளில் பயணிக்கும் நிலை அதிகரித்துள்ளது.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர்கள் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயணத்துக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தர்ணா குறித்து பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், “பெட்ரோல், உதிரிபாகங்கள் விலை அதிகரித்து விட்டது. எளிய முறையில் செய்யப்படும் தொழில் என்பதால் பலரும் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் பலரும் அரசு பேருந்துகளிலே ஏறுவதால் எங்களின் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்ததால் சிலர் தற்கொலை செய்யும் நிலையும் தொடர்கிறது. ஆகவே இத்திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.