மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு அலைமோதும் பெண் பயணிகள் கூட்டம். படம்: நா.தங்கரத்தினம்.

 
தமிழகம்

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் அதிகரிக்கும் பெண் பயணிகள்: ‘வசூல் படி’ குறைந்ததால் தவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தவெக அரசின் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டத்​தால், பெண் பயணி​கள் எண்​ணிக்கை 40 சதவீதம் முதல் 50 சதவீதம் அதி​கரித்​துள்ள நிலை​யில், தங்​களுக்​கான ‘வசூல் படி’ குறைந்​து​விட்​ட​தாக அரசுப் பேருந்து ஓட்​டுநர், நடத்​துநர்​கள் தெரிவிக்​கின்​ற​னர்.

தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் 1 லட்​சத்து 8 ஆயிரம் ஓட்​டுநர், நடத்​துநர் மற்​றும் தொழில்​நுட்ப உதவி​யாளர்​கள் பணி​புரி​கின்​ற​னர். கடந்த அதி​முக, திமுக ஆட்​சிக்​காலம் வரை, அரசு போக்​கு​வரத்​துக் கழக விதிப்​படி ஓட்​டுநர்​களுக்​கும், நடத்​துநர்​களுக்​கும் தனி படி, ஓட்​டுநர் படி, நடத்​துநர் படி கொடுத்து வந்​தனர். அவர்​கள் ஓட்​டும் வழித்​தடத்​தில் ஒரு நாளைக்கு எவ்​வளவு டிக்​கெட் கட்​ட​ணம் வசூல் ஆகிறதோ, அதில் ரூ.100-க்கு ரூ.1 என்ற வீதத்​தில் ‘வசூல் படி’ வழங்​கப்​பட்டு வந்​தது.

கடந்த திமுக ஆட்​சி​யில் மாநகர, நகர பேருந்​துகளில் சாதாரண கட்​ட​ணப் பேருந்​துகளில் மட்​டும் மகளிருக்கு இலவசம் என அறிவிக்​கப்​பட்​டது. தவெக ஆட்சி அமைந்த நிலை​யில், கடந்த 2-ம் தேதி முதல் மாநகரங்​களில் எக்​ஸ்​பிரஸ், எல்​எஸ்​எஸ் டீலக்ஸ் பேருந்​துகள், புறநகர் பகு​தி​களில் சாதாரண பேருந்​துகள் மற்​றும் 40 கி.மீ.க்கு மேற்​பட்ட மலைப்​பகுதி சாதாரண பேருந்​துகள் என 12 ஆயிரத்து 692 பேருந்​துகளில், இலவச​மாக மகளிர் பயணம் செய்​ய​லாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தின் மூலம் தின​மும் 84.32 லட்​சம் பெண் பயணி​கள் பயனடை​வார்​கள் என தவெக அரசு தெரி​வித்​தது.

தவெக அரசின் மகளிர் வெற்​றிப் பயணம் திட்​டத்​துக்கு கிடைத்த வரவேற்​பால் அரசு மாநகர, புறநகர் சாதாரண பேருந்​துகளில் பயணம் செய்​யும் பெண்​கள் எண்​ணிக்கை 50 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. கடந்த திமுக ஆட்​சி​யில் சாதாரண கட்டண பேருந்​துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனு​ம​திக்​கப்​பட்​ட​தால், ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு ஏற்​படும் இழப்பை ஈடு​கட்ட ஒரு குறிப்​பிட்ட அளவு ‘வசூல் படி’ (பேட்​டா) நிர்​ண​யம் செய்​யப்​பட்டு வழங்​கப்​பட்​டது. ஆனால், தற்​போது அவ்​வாறு எந்த வசூல் படி இழப்​பீடும் வழங்​கப்​பட​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்​தி​யடைந்​துள்ள ஓட்​டுநர், நடத்​துநர்​கள் வழக்​கம்​போல் டிக்​கெட் கட்​ட​ணம் வசூலுக்கு ஏற்ப, ‘வசூல் படி’ வழங்க வேண்​டும் என்று அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து நடத்​துநர்​கள் கூறும்​போது, “மாநகர, புறநகர் சாதாரண பேருந்​துகளில் பெண்​களுக்கு ஜீரோ டிக்​கெட் வழங்​கப்​படு​கிறது. வழக்​கத்​தை​விட பெண்​கள் தற்​போது அரசுப் பேருந்​துகளில் பயணம் செய்​வது அதி​கரித்​துள்ள நிலை​யில் ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு வேலைப்​பளு அதி​கரி்த்​துள்​ளது. மகளிர் இலவச பயண திட்​டத்​துக்​கான தொகையை அரசு நேரடி​யாக போக்​கு​வரத்து நிர்​வாகத்​துக்கு செலுத்தி விடு​கிறது.

ஆனால், களத்​தில் பணி​யாற்​றும் ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு இதற்​கான ‘வசூல் படி’ கிடைப்​ப​தில்​லை. 100 பயணி​களில் 60 பெண் பயணி​கள் பேருந்​துகளில் ஏறும் நிலை​யில், அந்த 60 பயணி​களுக்​கான ‘வசூல் படி’ கொடுக்​கப்​படு​வ​தில்​லை. ஆண்​களுக்​கான டிக்​கெட் கட்​ட​ணத்​துக்கு மட்​டுமே ‘வசூல் படி’ கொடுக்​கப்​படு​கிறது.

இதனால், கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் இது​வரை பெற்​று​வந்த வசூல் படி​யில் 50 சதவீதம் வரை குறைந்​துள்​ளது. அதனால் தமிழக அரசும், போக்​கு​வரத்​து நிர்​வாக​மும் நாள் ஒன்​றுக்கு நிரந்​தர​மாக வசூல் தொகை ரூ.20,000 என கணக்​கிட்டு அதற்​குரிய வசூல் படியை ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு வழங்க வேண்​டும்” என்​ற​னர்.

இதுபற்றி போக்​கு​வரத்து கழக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “அரசுப் பேருந்​துகளில் டிக்​கெட் கட்டண வசூல் அடிப்​படை​யில் ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு வசூல் படி வழங்​கப்​படும். வெற்​றிப் பயணம் திட்​டத்​தால் அரசுப் பேருந்​துகளில் இலவச பயணம் மேற்​கொள்​ளும் பெண் பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ள​தால் டிக்​கெட் கட்டண வசூல் குறைந்​துள்​ளது. இதனால் ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு வழங்​கப்​படும் வசூல் படி அளவும் குறைந்​துள்​ளது.

இருப்​பினும் வெற்​றிப் பயண திட்ட பேருந்​துகளில் பயணம் மேற்​கொள்​ளும் பெண் பயணி​களுக்கு வழங்​கப்​படும் டிக்​கெட் எண்​ணிக்​கை, கட்டண விவரங்​கள் அரசுக்கு அனுப்பி வைக்​கப்​படும். இந்த டிக்​கெட்​களை​யும் அரசு கட்டண டிக்​கெட்​​டாக கணக்​கில் வைத்து அதற்​​கான வசூல் படி வழங்க போக்​கு​வரத்து கழகங்​களுக்கு அனு​மதி கிடைத்​து​விடும் என நம்​பு​கி​றோம். அதன்​பிறகு இலவச பயண டிக்​கெட்​டுக்​​கான வசூல் படி ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு வழங்​கப்​படும்’’ என்​றார்.

SCROLL FOR NEXT