படம்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னை: நவ.18 மற்றும் 19ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘அக்வான்’ புயல் நவம்பர் 20-ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (நவ.15) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை (நவ.16) 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் (நவ.17) மாலை தீவிர புயலாக நிலவக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளக் கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இன்று (நவ.16) மற்றும் (நவ.17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ.18 மற்றும் 19-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நவ.20 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நவ.21 மற்றும் 22-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ.17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் நவ.18-ம் தேதி வரை வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.19 அன்று வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுப்பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.