மதுரை: மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸில் பிடிபடாமல் இருப்பதற்காக ஆகாஷ் தப்பியோடிபோது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார்.
இதையடுத்து ‘ஆகாஷை போலீஸார் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கி கொலை செய்துள்ளனர். இதனால் போலீஸார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கோரி அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்யவும், வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்க்கவும் உத்தரவிட்டார். அதன்படி ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவும் சேர்க்கப்பட்டது.
இருப்பினும் ஆகாஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையிலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துவது சரியல்ல எனக் கருத்து தெரிவித்து, போராட்டம் நடத்தி வருவோரை காலி செய்ய போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘ஆகாஷின் பெற்றோர் உடலை இன்னும் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். மனுதாரர் தரப்பில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டப்படி ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். தற்போது ரூ.6 லட்சம் வழங்கியுள்ளனர்’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.