தமிழகம்

‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்​துக்கு உடனடி​யாக தணிக்கை சான்​றிதழ் வழங்க வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்​பி​டா​மல் தள்ளி வைத்​துள்​ளது.

தவெக தலை​வரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப்​படம் ‘ஜனநாயகன்’. இப் படத்தை பொங்​கல் பண்​டிகையை முன்னிட்டு கடந்த ஜன.9-ம் தேதி வெளி​யிட படத் தயாரிப்​புக்​குழு திட்​ட​மிட்டு இருந்​தது. ஆனால், படத்துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரியம், மறுஆய்வுக்கு அனுப்பியது.

          

இதை எதிர்த்து படத்த​யாரிப்பு குழு, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷ, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரி​யத் தலை​வரின் உத்​தரவை ரத்து செய்​து, உடனடி​யாக இப்​படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க ஜன.9-ம் தேதி உத்தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யம் சார்​பில் சென்னை உயர் நீதிமன்​றத்தில் மேல்​முறையீடு செய்​யப்பட்​டது. இதனை ஏற்ற உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதித்து விசா​ரணையை ஜன.20-க்கு தள்ளி வைத்​தது.

இந்த இடைக்​கால தடையை எதிர்த்து படக்​குழு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதனை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், இந்த விவ​காரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்​வையே நாட அறிவுறுத்தியது.

உயர் நீதி​மன்​றம் இந்த வழக்கை ஜன.20-ம் தேதி விசா​ரித்​து, கூடு​மானவரை அன்​றைய தினமே உத்​தரவு பிறப்​பிக்க நடவடிக்கை எடுக்​கும் என்​றும் கூறி மனுவை முடித்து வைத்​தனர். அதன்​படி, தணிக்கை வாரி​யம் தாக்​கல் செய்​திருந்த மேல்முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முருகன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்தது.

அப்​போது தணிக்கை வாரியம் தரப்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்​.சுந்​தரேசன், “படத்தை மறுஆய்வு குழு​வுக்கு அனுப்ப முடிவு செய்​தது குறித்து கடந்த ஜன.5-ம் தேதியே படத்​த​யாரிப்பு குழு​வுக்கு ‘இ-சினி ப்ரம்​மான்’ என்ற இணை​யதளம் வாயி​லாக அனுப்பி வைக்​கப்​பட்டு விட்​டது.

ஆனால், படத்​த​யாரிப்பு குழு சான்​றிதழ் கோரி ஜன.6-ம் தேதி வழக்கு தொடர்ந்து ஜன.9-ம் தேதி தங்​களுக்கு சாதக​மான உத்​தரவை பெற்​றுள்​ளது. கேட்​காத பரி​காரத்தை தனி நீதிபதி கொடுத்தது சட்​டத்​துக்கு புறம்​பானது” என்றார். படத்​த​யாரிப்பு குழு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சதீஷ் பராசரன், வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் ஆகியோர், “தனி நீதிபதி தீர்ப்பு வழங்​கிய மறுநிமிடமே தணிக்கை வாரி​யம் மேல்​முறை​யீடு செய்​துள்​ளது.

தணிக்கை வாரிய நடவடிகை​யால் கடும் நஷ்டம் ஏற்​பட்​டுள்​ளது. தணிக்கை வாரி​யம் வெளிப்​படை​யாக நடந்து கொள்​ள​வில்​லை” என்​றனர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “நீதி​மன்ற நடை​முறை​களை முடித்து ஒரே நாளில் தீர்வு வேண்டும் என படத்​த​யாரிப்பு குழு கோரு​வதை ஏற்க முடி​யாது.

சான்​றிதழ் பெறும் முன்​ வெளி​யீட்டு தேதியை முடிவு செய்​யக்​ கூ​டாது. இயற்கை நீதி​யைப் பின்பற்​றித்​தான் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யும் எனக்​கூறி தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT