தமிழகம்

“கோவை சிறுமி கொலை வழக்கில் குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” - ராமதாஸ்

மோகன் கணபதி

சென்னை: “கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குறுகிய காலத்திலேயே தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தை பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான சட்டப்பூர்வ தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குறுகிய காலத்திலேயே தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், உளவியல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு மற்றும் காவல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு, இரவு ரோந்து, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும்.

பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த கொடூர சம்பவம் மீண்டும் எங்கும் நிகழாத வகையில் நிரந்தரமான பாதுகாப்பு அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT