தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
சென்னை: “தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை தீவிரமாகக் கையாள முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமையாகும்.” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். திருச்சியில் ரவுடி பாதுஷா ஓட ஓட விரட்டி விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில், மதுக் குடிப்பகத்தில் பொன்னாம்பட்டியைச் சேர்ந்த தவெக நிர்வாகி நவீன் குமார் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இக்கும்பலைச் சேர்ந்த இரு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஓர் ஆணின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 12 வயது, 15 வயது சிறார்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை, பெரம்பூரில் தன் கணவனை மனைவியே, ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்ப நல்லூர் அருகே பொது இடத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 7 பேரை அரிவாளால் வெட்டியதாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக காங்கிரஸ் நிர்வாகி நடராசன் என்பவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக்க 7 சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தடை செய்யப்பட்ட 227 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தகரை அருகே 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதால், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்களின் தொடர்ச்சியாகும்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் உயிருக்கு அச்சம் கொண்டு வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்தக் கொலைகள் சாதாரண தனி நபர் தகராறுகள் மட்டுமல்ல; குற்றவாளிகள் தைரியமாக பகலில், பொது இடங்களில் கொலைகள் செய்து தப்பிச் செல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பது இதன் மூலமே தெளிவாகிறது.
ஆளும் அரசு தொடர்ந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. காவல்துறை முழுமையாக அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகரித்துள்ளது. குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இதனால் ஏழை, நடுத்தர மக்களும், பெண்களும், வியாபாரிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இக்கொலை வழக்குகளில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை தீவிரமாகக் கையாள முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதற்கு மக்கள் அச்சப்படாத வகையில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்ய வேண்டும்.கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், உடனடியாக சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். இல்லையென்றால் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் போல சட்டம் ஒழுங்குக்கும் மக்கள் போராடும் நிலை உருவாகும். எனவே சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.