தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
சென்னை: “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் விவகாரத்தில் எம்எல்ஏவை விசாரணை முடியும் வரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான மற்றும் தேவையற்ற வாட்ஸ்-அப் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த மாவட்ட ஆட்சியர், நவ.23-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், அரசு இல்லத்துக்குள் அத்துமீற முயன்றதாகவும், புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக பொறுப்பு வகிக்கும் பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிக்கே இத்தகையத் தொல்லை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏ இதனை மறுத்துள்ள நிலையில், புகாரின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் 7 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.
இதற்கிடையே, நவ.23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் பிற்பகலில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுகளின் காலவரிசை மற்றும் அரசுத் தரப்பின் விளக்கம் குறித்து முழுமையான தெளிவு அளிக்கப்பட வேண்டும்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தின் சாதாரண பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஆட்சியர் நேரடியாக புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை ஏன் வழக்கின் தற்போதைய நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயங்குகிறது?. குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டப்பேரவை உறுப்பினரை விசாரணை முடியும் வரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைப் பறிப்பது தொடர்பாகவும் சட்டம் அனுமதிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் கிடைக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற அரசு முயற்சி செய்யுமானால் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.