வேல்முருகன்

 
தமிழகம்

“8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடும் நடவடிக்கை தேவை” - வேல்முருகன்

மு.வேல்சங்கர்

சென்னை: தேன்கனிக்கோட்டையில் 8 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, “கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியை கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. இந்தக் கொடூர சம்பவத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது அரசின் பரிசல்ல. அடிப்படை உரிமை. ஆனால், கடந்த சில மாதங்களில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இப்போது தேன்கனிக்கோட்டை.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இங்கும் (தேன்கனிக்கோட்டை) ரோந்து மேற்கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்பு படை, கண்காணிப்பு, காவல் துறை, போக்சோ சட்டம், இத்தனைப் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் ஒரு 8 வயது குழந்தை குற்றவாளியின் கைகளில் சிக்கியது எப்படி?

தேன்கனிக்கோட்டை சிறுமி வழக்கில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உயர்தர மருத்துவம், உளவியல் ஆதரவு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்.

மேலும், கடந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முக்கிய குற்ற வழக்குகளில் கைது, குற்றப் பத்திரிகை, விசாரணை, தண்டனை, நிலுவை ஆகிய விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT