சென்னை: தவாக தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: மனிதன் தன் வாழ்நாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட வேண்டிய பொன்னான நேரங்கள், இன்றைக்கு சென்னையில் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் கரைந்து கொண்டிருக்கின்றன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சிக்னல்களில் காத்துக் கிடக்கின்றன. இது முழுக்க முழுக்க நிர்வாக திட்டமிடலின் படுதோல்வியாகும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றினால், சென்னையில் நெரிசல் குறையும் என்றனர்; எங்கே அந்த மாற்றம் நிகழ்ந்தது? இதற்கிடையே மெட்ரோ பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவை எவ்வித மாற்றுப்பாதை திட்டமிடலும் இன்றி மக்களின் பொறுமையை சோதிக்கின்றன.
புதிய தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் திறக்கப்படும்போது ஆயிரக்கணக்கான வாகனங்களும், லட்சக்கணக்கான மக்களும் இந்த நகரின் சாலைகளில்தான் வந்திறங்குகிறார்கள்.
சென்னையின் சாலைகளை அகலப்படுத்துவதால் மட்டும் இங்குள்ள பிரச்சினை தீராது. சென்னையில் ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளை உரிய மாற்றுப்பாதைகளுடன், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னையை மட்டுமே மையமாகக் கொண்டு குவியும் முதலீட்டுக் கொள்கையை கைவிட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.