திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) விலகுவதாக அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார். அமைச்சர்கள் தவறு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறியதாவது: நாங்கள் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் திமுக கூட்டணியில் பயணித்தோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு திமுக எங்களை அழைத்தது. திமுகவின் பேச்சுவார்த்தை குழு, எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்தது.
ஒரு இடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் இடங்கள் ஒதுக்குவதில் முன்பின் இருந்தாலும் எங்களின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றோம். திமுக அரசு எங்கள் கோரிக்கைகள் குறித்து சிறிதளவும் பொருட்படுத்தவில்லை. கோரிக்கைகள் வைத்து கூட்டணி பேசுகிறாயா என பெரியண்ணன் பாணியில் திமுக எங்களைக் கையாண்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததற்கு அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகளே காரணம். சிலர் திமுக ஆட்சியில் இருந்து கொண்டு பாசிசத்துக்கு ஆதரவாக கொடி பிடிக்கிறார்கள். சமூக நீதிக்கு எதிரான சக்திகளை வைத்துக் கொண்டு, திமுக எப்படி சமூக நீதியை பின்பற்றும்? திமுக தலைமையிலான கூட்டணியில் இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த முதல்வருக்கு நன்றி.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறது. நாங்கள் வைத்துள்ள 10 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள அமைப்புகள், அரசியல் கட்சிகளை கலந்து பேசி, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். என்டிஏ தலைமையிலான கூட்டணிக்கு செல்ல மாட்டோம்.
திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர், பரந்தூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இடம் வாங்கி உள்ளார். அதை 5 மடங்கு கொடுத்து அரசு வாங்குகிறது. அதில், வேல்முருகன் குடைச்சலாக உள்ளார் என்று என்னை எதிர்க்கின்றனர். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள், எந்த துறை செயலாளர்கள் அவர்களது துறையில் எவ்வளவு தவறுகள் செய்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
‘நான் அப்படி பார்ப்பேன்’ - கிண்டலடித்த துரைமுருகன்
திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியதை எப்படி பார்க்கிறீர்கள் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சென்னை அறிவாலயத்தில் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு துரைமுருகன் “நான் எப்படி பார்ப்பேன், அப்படி பார்ப்பேன்”(கிண்டலாக அண்ணாந்து வானத்தை பார்த்தார்) என்றார். தொடர்ந்து திமுக மீதும் அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வேல்முருகன் வைத்திருப்பது பற்றி கேட்டதற்கு, “கூட்டணியை விட்டு போகும்போது, நல்லாட்சி நடக்கிறது, நான் போயிட்டு வரேன் என்றா சொல்வார்கள்” என எதிர்க் கேள்வி கேட்டு சிரிப்பலையை ஏற்படுத்தினார் துரைமுருகன்.