வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சாலை வழியாக வரும் நடிகர் விஜய் வாகனத்தைப் பின் தொடரும் வாகனங்களுக்கு போலீஸார் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (பிப். 23-ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக, முள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் சுமார் 33 ஏக்கரில் மைதானம் தயாராக உள்ளது. இங்கு நிகழ்ச்சி நடத்த மாவட்ட காவல் நிர்வாகம் எழுப்பிய 20 கேள்விகளுக்கு தவெக நிர்வாகிகள் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளனர். அதன்பேரில், இன்று அவர்களுக்கு நிகழ்ச்சிக்கான அனுமதி முறைப்படி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தவெகவின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் 4,900 பேர் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் க்யூஆர் கோடு கொண்ட பாஸ் வழங்கப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு கேலரியிலும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கவும், நிகழ்ச்சி மைதானத்தில் 50 தனித்தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், 25 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவுடன் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 100 தன்னார்வலர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியில் ஈடு படுத்தப்பட உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலை யில் சுமார் 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையொட்டி அகரம்சேரியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தவெக நிர்வாகிகள் சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதர வாகனங்கள் தேசிய நெடுஞ் சாலை வழியாகவே செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெற உள்ள மைதானம் அருகில் உள்ள இரண்டு பாழடைந்த கிணறுகளைப் பாதுகாப்பாக மூடி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்திக் கொள்ள தவெக அனுமதி கேட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் சென்னையிலிருந்து சாலை வழியாக காரில் வருகை தர உள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே, அவரது வாகனத்துக்குப் பின்னால் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் பின்தொடராமல் இருக்கக் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடிகர் விஜய் பயணிக்கும் வாகனத்தைப் பின் தொடர்ந்து 5 அல்லது 6 வாகனங்கள் மட்டும் வரும் என்றும் அதற்கு மட்டும் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் கோரப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் யாரும் பின்தொடர்ந்து செல்லாதபடி சிறிது நேரம் வாகனங்களைத் தடுத்து நிறுத்தவும் போலீஸார் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.