வேலூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ளர். இதில், மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரத்து 5 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரத்து 5 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 5 லட்சத்து 28 ஆயிரத்து 619 பேரும், பெண்கள் 5 லட்சத்து 59 ஆயிரத்து 236 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 150 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 27-10-2025 -ம் தேதியன்று 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் திருத்த பணிகள் மூலம் உயிரிழந்தவர்கள் மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 25 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள் விவரம் - தொகுதி வாரியாக:
காட்பாடி - 35,666
வேலூர் - 54,565
அணைக்கட்டு - 36,656
கே.வி.குப்பம் (தனி) - 29,441
குடியாத்தம் (தனி) - – 58,697
மொத்தம் - 2,15,025
புதிதாக வாக்காளர் சேர்க்கை, பெயர் நீக்கம், திருத்தம் செய்ய உரிய படிவங்கள் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள படிவம் 6-ஏ படிவத்தை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் வழங்கலாம்.
புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம் செய்வதற்கான படிவங்களை வரும் ஜன.18-ம் தேதி வரை வழங்கலாம். இதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் - தொகுதி வாரியாக:
காட்பாடி – 2,15,751
வேலூர் - 1,98,722
அணைக்கட்டு - 2,27,645
கே.வி.குப்பம் (தனி) - 2,07,382
குடியாத்தம் (தனி) - 2,38,505
மொத்தம் - 10,88,005