வேளாங்கண்ணியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பேராலய துணை அதிபர் அற்புதராஜ்.
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் தவெக தொண்டர்களால் திருப்பலி தாமதமானதாக வெளியான செய்திகளுக்கு பேராலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பேராலய துணை அதிபர் அற்புதராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மே 2-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தவெக தலைவர் விஜய், பேராலயத்துக்கு வர இருப்பதாக ஊடகங்கள் வழியாக செய்தி பரவியது.
ஆனால், அதுகுறித்து பேராலய நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் கொடுக்கப்படவில்லை. மே 2-ம் தேதி காலை 5 மணிக்கு வழக்கமாக பேராலயத்தை திறந்து, திருப்பலிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது, அங்கே ஏராளமான தவெக தொண்டர்கள் இருந்தனர். திருப்பலிக்கு முன்னதான ஜெபம் தொடங்கும்போது, அந்த தொண்டர்கள் சப்தமிட்டு கொண்டிருந்ததால், அவர்களை கலைந்து செல்லுமாறு குருக்கள் அறிவுறுத்தினர்.
அதையேற்று அவர்கள் கலைந்துச் சென்றனர். பின்னர், வழக்கம் போல 5.40-க்கு ஜெபமும், காலை 6 மணிக்கு திருப்பலியும் நடைபெற்றது. அன்றைய திருப்பலி 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமானது என்று பரவிய தகவல்கள் உண்மை இல்லை.
பேராலய பகுதியில் பரபரப்பை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையிடம் இதை தெரிவித்தோம்.
அவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, விஜய் வரவில்லை, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தான் வருகிறார் என்று கூறினார்கள்.
மற்ற தலைவர்களை வரவேற்பது போல அவரையும் வரவேற்று மரியாதை செய்தோம். ஊடகங்களில் பரவியதுபோல அன்றைய தினம் திருப்பலி தாமதமும் ஏற்படவில்லை, தடைபடவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.