வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வந்தடைந்த மின்சார ரயில். (அடுத்த படம்) வேளச்சேரி - பரங்கிமலை தடத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள புழுதிவாக்கம் ரயில் நிலையம்.
தென் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான, வேளச்சேரி - பரங்கிமலை தடத்தில் மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. இதனால் பல முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில், தினசரி 80-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இம்மார்க்கத்தில் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான 5 கி.மீ. தொலைவை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தட திட்டப்பணி, 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பணிகள் முடங்கின. பின்னர் 2021ம் ஆண்டுக்குப் பிறகு, பணிகள் மீண்டும் தொடங்கின.
கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணிகள் முடிவடைந்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு நேற்று பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு முதல் மின்சார ரயில் சேவை நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த ரயிலில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் புழுதிவாக் கம்,ஆதம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், சமூக ஆர்வலர் கள், பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களும் பயணித்தனர்.
இம்மார்க்கத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில் பயணம் செய்ய புழுதிவாக்கத்தைச் சேர்ந்த வி.ராஜசேகர், ஜி.சிவக்குமார். எம். அருள் தினகர் ஆகியோர் கூறியதாவது: இந்த ரயில் சேவையை நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தோம். இப்போது நிறைவேறியுள்ளது, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதி யைச் சேர்ந்த மக்களுக்கு நேரடி யாக ரயில் சேவை இல்லாமல் இருந்தது. தற்போது, வேளச்சேரி - பரங்கிமலை ரயில் தடம் இணைப்பு மூலமாக, சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் என பல முக்கிய இடங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறிவிப்பு பலகை வேண்டும்: வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கீதா கணேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ரயிலில் பயணித் தனர். புதிய ரயில் சேவை குறித்து. கீதா கணேசன் கூறும்போது. "எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. வேளச்சேரி வழியாக சென்னை கடற்கரைக்கு பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பரங்கிமலை நிலையத்தில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
அதேபோல் புழுதிவாக்கம் ரயில் நிலையத்திலும் வைக்க வேண்டும், மேலும் அங்கு அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டு பணியை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இது தவிர, ஆதம்பாக்கம் ரயில் நிலைய பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்" என்றார்.
முதல் நாளில் ரயில்கள் அட்டவணைப்படி இன்றி காலதாமத மாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். எனவே, இனி ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதோடு, அனைத்து ரயில் நிலையங்களிலும் கால அட்டவணையை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் பயணம்: பரங்கிமலை ரயில் நிலையத் துக்கு அமைச்சர் தா.மோ.அன் பரசன் நேற்று காலை வந்தார். அங்கிருந்து வேளச்சேரி வரை யும், மறுமார்க்கமாக பரங்கி மலை வரையும் மின்சார ரயிலில் பயணித்தார். பின்னர் அவர் கூறும் போது, "வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தாமதமானதற்கு அதிமுக ஆட்சியே காரணம். அவர்கள் முறையாக நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்க வில்லை. முன்பே திறக்க வேண்டிய திட்டம் இது. காலம் தாழ்த்தி விட்டு தற்போது அவசர கதியில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே தரப்பில் முறையாக எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை" என்றார்.
86 ரயில் சேவைகள்: சென்னை கடற்கரை பரங்கிமலை இடையே 86 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 4 ரயில் சேவைகளும், வேளச்சேரி-பரங்கிமலை இடையே 6 ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.