கோவையில் தயாராகும் அதிநவீன வசதிகளுடன் கூடிய தேர்தல் பரப்புரை வாகனங்கள்.

 

படங்கள்: ஜெ.மனோகரன்

தமிழகம்

கட்சி தலைவர்களின் பிரச்சாரத்துக்கு கோவையில் தயாராகும் வாகனங்கள்!

இரா.கார்த்திகேயன்

கோவை: தமிழ்நாட்டில் இன்னும் சரியாக ஒரு மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிகளும், தொகுதிப் பங்கீடுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனங்கள் கோவையில் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகின்றன. இவை தவிர அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், தனித்து களமாடும் நாம் தமிழர் கட்சி மற்றும் சசிகலா - ராமதாஸ் என புது விதமாக பல முனை போட்டியை தமிழகம் எதிர்கொள்கிறது.

          

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியினர், தங்கள் தலைவர்களுக்காக அதிநவீன பிரச்சார வாகனங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விட்டனர். இதற்காகக் கட்சிகள் கொடுத்த ஆர்டர்களின் பேரில் கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, பிரச்சார வாகனங்களை தயார் செய்யும் நிறுவன உரிமையாளர் பி.வி.முகமது ரியாஸ் கூறியது: “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக டெம்போ டிராவலர் வாகனங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

பி.வி.முகமது ரியாஸ்

கடந்த காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்திற்காக வாகனங்களைத் தயார் செய்து கொடுப்பதற்கான ஆர்டர்கள் வந்தன. தொடர்ந்து அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வாகனங்களை தயார் செய்து கொடுத்ததால், கோவையில் மீண்டும் மீண்டும் எங்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின.

இதற்காகப் புதிதாக டெம்போ டிராவலர் வாகனங்களை வாங்கி, அதைப் பதிவு செய்து எங்களிடம் கொண்டுவந்து கொடுப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். 15 நாளில் தொடங்கி 2 மாதங்கள் வரை ஒரு வாகனத்தை செய்து தருவோம். தமிழகத்தைத் தவிர புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன. கேரளாவில் இருந்து குறைந்த அளவே வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஹைட்ராலிக் மேடை, தானியங்கி மேடை, குளிரூட்டி வசதியுடன் கூடிய சொகுசுப் படுக்கை, காற்றோட்ட வசதியுடன் கூடிய சொகுசு இருக்கை, மேஜை, கழிவறை, தொலைக்காட்சி, வை-பை, போகஸ் லைட், ஒலிபெருக்கி, ஸ்பீக்கர், ஏர் சஸ்பென்சன், இரு பக்கவாட்டில் பாதுகாவலர்கள் பிடித்துக் கொண்டு நிற்பதற்கான ஃபுட்போர்டு, உயர் தரத்தில் குளிரூட்டி வசதி ஆகியவற்றை விருப்பத்துக்கேற்ப பொருத்தித் தருகிறோம். கழிவறை வசதி எல்லோரும் கேட்பதில்லை. கேட்பவர்களுக்கு மட்டும் செய்துகொடுக்கிறோம்.

வாகனங்கள் சென்னை, கோவை, சேலம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றன. அனைத்து கட்சியினருக்கும் செய்து தருகிறோம். தற்போதைய தேர்தலில், வாகனங்களுக்கு ஏஐ கேமராக்கள் பொருத்தி தருகிறோம். அதேபோல அர்பேனியா வாகனம் அதிகளவில் இந்த தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட உள்ளது.

டெம்போ டிராவலரை காட்டிலும் இடவசதியுடன் இருப்பதால் இதனை அதிகம் பேர் பயன்படுத்த உள்ளனர். சிறிய தெருக்கள், வீதிகளில் ஜீப், பொலிரோ மற்றும் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்துவதற்கு வாகனங்களை தயார் செய்து அனுப்பி வைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT