மு.வீரபாண்டியன் | கோப்புப் படம்
சென்னை: ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டின் ஆளுநராக 2021ம் ஆண்டு ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். அவர் ஆளுநராக பதவி நியமனம் செய்யப்பட்டது முதல், தமிழ்நாட்டின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்டு வந்தார்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதலை வழங்காமல் கிடப்பில் போட்டார். அவரது போக்கை உச்ச நீதிமன்றமே கண்டித்தது. தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத் தொடரில், அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்ததோடு, தன் விருப்பப்படி உரையாற்ற முயன்றார்.
சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்புகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டு சட்டமன்றத்தை இழிவு படுத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிரான போக்கை இறுதி வரை கடைபிடித்ததோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, மொழி, முற்போக்கு மரபுகளுக்கு எதிராக செயல்பட்டார்.
ஆளுநர் பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் "இந்துத்துவா அரசியலை" முன்னெடுத்ததோடு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான "சனாதன தர்மத்தை" ஆதரித்து தொடர்ந்து கருத்துரைகளை வழங்கினார்.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான, தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிரான, தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தொடர்ந்து செயல்பட்டார். அக்கொள்கையை பல்கலைக் கழகங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சிகளை மூர்க்கத்தனமாக மேற்கொண்டார். வள்ளுவர், வள்ளலார், பாரதியோர் போன்றோரை இந்துத்துவா சிமிழுக்குள் அடக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
முற்போக்கு உலகமே ஏற்றுக் கொண்ட மாமேதை காரல் மார்க்ஸை தொடர்ந்து சிறுமைப்படுத்தி வந்தார். ஆளுநரின் இத்தகைய அடாவடித்தனங்களை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடுமையான போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் இதை வரவேற்கின்றனர்.
ஆயினும் அவர் தற்பொழுது மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராகும் ஆர்.என்.ரவி, போராட்டங்களின் மூலம் தமிழ்நாடு புகட்டிய பாடங்களை மனதில் ஏந்தி, மேற்கு வங்கத்திலாவது நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிக் கோட்பாடு, மாநில உரிமைகள், மாநில மக்களின் உணர்வுகள், மதச்சார்பின்மை போன்றவற்றை மதித்து செயல்பட வேண்டும்.
கூட்டாட்சி முறைக்கு எதிரான ஆளுநர் பதவியே அவசியமில்லை என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய மோடி அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.