கோப்புப்படம்
கள்ளக்குறிச்சி: “பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. விசிக எப்போது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கும். அந்த அடிப்படையில் நாங்கள் நீதியின் பக்கம்தான் நிற்போம்” என கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான சர்ச்சை புகார் குறித்து அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் சமூக நீதித் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான சர்ச்சை புகார் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “ நான் இன்றுதான் மாவட்டத்துக்கு வந்துள்ளேன், இனிதான் அதுகுறித்து விசாரிக்க வேண்டும். அதுகுறித்து தெரிந்துகொண்டுதான் பேசமுடியும்.
பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. விசிக எப்போது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கும். அந்த அடிப்படையில் நாங்கள் நீதியின் பக்கம்தான் நிற்போம். இந்தப் பிரச்சினை குறித்த விவரங்கள் தெரிந்தபின்னர், அதுபற்றி யாரிடம் சொல்ல வேண்டும் என்பது பற்றி முடிவு செய்வோம்.
இந்த விவகாரத்தில் நான் விசாரிக்க வேண்டுமா என்பதற்கான அதிகாரத்தை முதல்வரோ அல்லது சம்மந்தப்பட்டவர்களோ சொன்னால் மட்டுமே செய்ய முடியும். என்னிடம் இதுவரை அதுபற்றி யாரும் பேசவில்லை. இதுபற்றி என்னிடம் அறிக்கை கேட்டால், விசாரித்து நான் அறிக்கை தருவேன். பெண்களுக்கு எதிரான செய்தியை பரப்புவது, அவர்களை அச்சுறுத்துவது, வேலை செய்யவிடாமல் சீர்குலைப்பது போன்ற செயல்கள் எப்போதும் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அவர் எந்தக் கட்சியின் சார்பும் இல்லாமல், சட்டத்தின்படி நேர்மையாக செயல்படுகிறார். பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களை செயல்பட விடாமல் செய்வது தவறு. நாங்கள் எப்போதும் பெண்கள் பக்கம், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம்” என்றார்.