விசிக தலைவர் திருமாவளவன்
“விசில் அடிப்பவர்களைத் திரையரங்குகளுக்கு அனுப்புங்கள். சினிமா மோகத்தில் மயங்குபவர்கள் சிறுத்தைகள் அல்ல” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதி குமராட்சி பகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றுள்ள அதிமுக ஜெயலலிதாவின் அதிமுக அல்ல. அது மோடியின் அதிமுக. அதேபோல் அன்புமணி தலைமையிலான பாமக-வும் மோடியின் பாமக தான். நீங்கள் பாமக-வுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நேரடியாக பாஜக-வுக்கே செல்லும்.
சாதி உணர்வைத் தூண்டி உங்களிடம் ஓட்டு வாங்குபவர்களிடம் ஏமாறாதீர்கள். விசில் அடிப்பவர்களைத் திரையரங்குகளுக்கு அனுப்புங்கள். சினிமா மோகத்தில் மயங்குபவர்கள் சிறுத்தைகள் அல்ல. விஜய்க்குப் போடும் ஓட்டு பாஜக-வுக்குப் போடுவதாகவே அர்த்தம். திமுக-வை பலவீனப்படுத்தவே அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் மூளை செயல்படுகிறது. காட்டுமன்னார்கோவில் சிறுத்தைகளின் தாய்மடி என்பதை நிரூபிக்கும் வகையில், ஜோதிமணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.