தமிழகம்

“இப்போதே ஆட்சி அதிகாரத்தில் எங்கள் பங்கு உள்ளது!” - விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் நேர்காணல்

கோ.யுவராஜ்

சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-வின் செயல்திட்டங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி:

விசிக-வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

விசிக-வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற கட்சிகள் அரசியல் களத்தில் மட்டும் பயணிக்கின்றனர். விசிக சமூக களத்திலும், அரசியல் களத்திலும் சேர்ந்தே பயணிக்கிறது. இதில் முதன்மையானது சமூக களம் தான். சமூகத்தில் பாகுபாடற்ற நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு. ஆனால், இந்த சமூகப் பாகுபாட்டை சனாதனம் தூக்கிப் பிடிக்கிறது. சமூக விடுதலை சார்ந்த களத்தில் விசிக-வை எடுத்துச் செல்ல பணியாற்றுகிறோம்.

விசிக பட்டியலின மக்களுக்கான கட்சி என்ற பார்வையிலேயே இன்னமும் இருக்கிறதே..?

அரசமைப்பு சாசனத்தை வடிவமைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு முதல் சட்டத்தை முன்மொழிந்து கொண்டு வந்தவர் அம்பேத்கர். இவை அனைத்து தரப்பு மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டவை தான்.

ஆனால், அவரை இன்னும் ஒரு சாதி தலைவராகவே பார்க்கின்றனர். விசிக எந்த வேறுபாடும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது. அப்படி இருந்தும் ஒரு குறிபிட்ட சமூகத்தினருக்கானவர்களாக எங்களைப் பார்ப்பது சாதிய கட்டமைப்பின் விளைவு.

கொள்கை அரசியலில் வலிமையாக உள்ள விசிக, கூட்டணியிலேயே பயணிக்கிறதே... தனித்துப் போட்டியிட என்ன தயக்கம்?

இந்தியாவில் தற்போது உள்ள தேர்தல் முறையில் எந்தவொரு சிறுபான்மையினரும் தனித்து நிற்க முடியாத நிலை உள்ளது. அம்பேத்கர் பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டார்.

பொதுவான பிரதிநிதி ஒருவரை தேர்வு செய்யவும், பட்டியலின பிரதிநிதி ஒருவரை தேர்வு செய்யவும் இதை அவர் வலியுறுத்தினர். ஆனால், இப்போதுள்ள தேர்தல் முறைதான் விசிக, கூட்டணி வைத்து போட்டியிடக் காரணமாக உள்ளது. இந்த தேர்தல் முறை இருக்கும் வரை கூட்டணி என்பது தவிர்க்க முடியாதது.

2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை வலியுறுத்தமாட்டோம் என திருமாவளவன் கூறியிருக்கிறாரே... அதிகாரத்தில் பங்கு கேட்க விசிக-வுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறதா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக நிறைவேற்றிய நிறைய திட்டங்கள் விசிக-வின் கொள்கை அரசியலில் உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் சாதிக்க முடியாத பலவற்றை இந்த ஐந்து ஆண்டுகளில் விசிக சாதித்துள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீட்டில் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் ரூ.1 லட்சம் கோடியில் ரூ.20 ஆயிரம் கோடி, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்ய சட்டத்திருத்தத்தை கொண்டு வர வைத்துள்ளோம். இப்படி ஆட்சி அதிகாரத்தில் எங்கள் பங்கு உள்ளது.

பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இந்த விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்திகரமாக உள்ளதா?

தற்போது மக்கள் விழிப்படையத் தொடங்கிவிட்டனர். சமூக அநீதியை ஏற்க மறுக்கின்றனர். இதனால் பட்டியல் சமூகத்தினர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. இது தொடர்பான சம்பவங்கள் நடைபெறும்போது அரசு எடுக்கும் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற குற்றங்கள் நிகழாத வகையில், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சட்டப்பேரவையில் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் பல சமயங்களில் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் நீங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்துள்ளீர்களே... இதனால் ஏதாவது நன்மை ஏற்பட்டுள்ளதா?

தொழிலாளர் சட்டத்தில் வேலை நேர சட்டத்திருத்தத்துக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது விசிக தான். மாநில கல்வி கொள்கை உருவாக்க வேண்டும் என பேசிய முதல் கட்சி விசிக தான்.

இதேபோல பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளோம். ‘தடால் புடால்’ என ஊடக கவனத்துக்காக சத்தமாக பேசுவதை விட ஆட்சியாளர்கள், மாறுபட்ட கருத்துடையவர்களை கவரும் விதமாக பேசியதால் நிறையவே நல்லது நடந்துள்ளது.

விஜய் கட்சிக்கு விசிக-வினர் செல்வதாக திருமா சொல்லி இருந்தார். அதைத் தடுக்கத்தான் 234 மாவட்டச் செயலாளர்களை நியமித்திருப்பதாகக் கூறுகின்றனரே?

தொகுதிவாரியாக மாவட்டச் செயலாளர்கள் நியமிப்பதை 2010-ம் ஆண்டே திருமாவளவன் முன்மொழிந்தார். அப்போது மூத்த நிர்வாகிகள் சிலர் அந்த யோசனைக்கு மாற்றுக் கருத்து தெரிவித்தனர். அதனால் அப்போது அதைச் செயல்படுத்தவில்லை, தற்போது அதை செயல்படுத்தியுள்ளார்.

இது எங்களுடைய பயணம். விஜய்க்காக எங்களின் பயணம் மாறவில்லை. விஜய் தன்னை கருத்தியல் ரீதியாக இன்னும் முன்னிறுத்தவில்லை. கருத்தியலில் தெளிவில்லாத நபரை நோக்கி, கொள்கையற்றவரை நோக்கி இளைய தலைமுறையினர் செல்கின்றனர் என்பதையே திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்ட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கான திமுக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா?

போதைக்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய காலம். இது மிகப்பெரிய பண்பாட்டு யுத்தமாக மாறியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை நோக்கி திட்டமிட்டு போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழக அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல், சமுக இயக்கங்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கலாம் என்கிறார்களே... அப்படி நடந்தால் விசிக என்ன செய்யும்?

எங்களைப் பொறுத்தவரை, அன்புமணி பாமக, ராமதாஸ் பாமக என பிரிவு கிடையாது. பாமக-வை பற்றி எங்களுக்கு ஒரு பார்வை உள்ளது. எங்கள் தலைவர் ஏற்கெனவே பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று சொல்லி இருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள புதிய சூழல் குறித்து தலைமையிடம் ஆலோசித்து தான் கருத்துத் தெரிவிக்க முடியும். தலைவரும் முன்னணி தோழர்களுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பார்.

SCROLL FOR NEXT