திருமாவளவன்

 
தமிழகம்

“உதயநிதி பேசியது நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல” - திருமாவளவன்

தமிழினி

சென்னை: “நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் மீது பொய் வழக்குப் போடுவதிலேயே முதல்வரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.

அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.

சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும். நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.

தற்போதைய நிலையில், காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT