திருமாவளவன்

 
தமிழகம்

“இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவே” - திருமாவளவன்

தமிழினி

சென்னை: “கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி நலனும் முக்கியமானது. இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும். வலதுசாரி சக்திகள் காலூன்றக் கூடாது. அதனால் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனநிறைவே,” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பொதுத் தொகுதிகள், 6 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பணியாற்றுவோம். வெறும் தேர்தல் லாபத்துக்காக வலதுசாரிகளை வலுப்பெறவிட முடியாது. வலதுசாரி, திரிபுவாத சக்திகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு கூடுதலாக உள்ளது. மாநிலங்களவை சீட் தொடர்பாக தற்போது முடிவெடுக்க முடியாது என திமுக தலைமை கூறியுள்ளது. 23 கட்சிகள் உள்ள மெகா கூட்டணி இது.

கம்யூனிஸ்டுகளையும் சேர்த்து 18 தொகுதிகளை இடதுசாரிகளுக்கு திமுக வழங்கியுள்ளது. ஒன்று இரண்டு தொகுதிகளுக்காக கூட்டணி வெற்றி வாய்ப்பை கெடுக்க விரும்பவில்லை.

தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், இடதுசாரி அரசியலை திமுக பாதுகாப்பதாகவே நான் கருதுகிறேன். விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடும்.

ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக முரண்டுபட்டு கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி, வெற்றிக்கான வாய்ப்பை சேதப்படுத்திவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இதில் எங்களுக்கு மனநிறைவு இருக்கிறது. கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி நலனும் முக்கியமானது. இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் காலூன்றக் கூடாது. ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT