தமிழகம்

முதல்வர் பதவி முதல் ஆட்சியில் பங்கு வரை: சலசலப்புகளுக்கு திருமாவளவன் அளித்த பதில்கள்

தமிழினி

சென்னை: உங்களை முதல்வராக்க முயற்சிகள் நடந்ததாகவும், அதை காங்கிரஸ் முறியடித்ததாகவும் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “காங்கிரஸ் எந்த வகையில் அதில் தலையிட்டது என்று எனக்குத் தெரியாது; அதிமுக - திமுக மற்றும் அதன் கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது,” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக சிதறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். இதற்கு மேல் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை. அன்புமணியை விஜய் சந்தித்துள்ளார். அந்த வரிசையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்திக்க வேண்டும். முதல்வர் விஜய் வேளச்சேரிக்கு 4.30 மணியளவில் என்னைச் சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது” என்றார்.

பின்னர், உங்களை முதல்வராக்க முயற்சிகள் நடந்ததாகவும், அதை காங்கிரஸ் முறியடித்ததாகவும் செய்திகள் பரவுகிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதில் காங்கிரஸ் எந்த அளவுக்கு தலையிட்டது என எனக்குத் தெரியாது. ஆனால் திமுக, அதிமுக மற்றும் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது.

இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாக சொன்னார்கள். கட்சியின் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை செய்துதான் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம். இடதுசாரிகள்போல் நிபந்தனையற்ற ஆதரவு இருக்க வேண்டும் என்றுதான் நானும் வலியுறுத்தினேன்; அமைச்சரவையில் பங்களிப்பு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் இருந்தது.

இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நாம் விளிம்பு நிலை மக்களுக்காக இயக்கம் நடத்துகிறோம்; நாம் அதிகார பகிர்வை கோருகிறவர்கள்; ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்வைப்பவர்கள், முன்வைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே நாம் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தை பொதுச் செயலாளர்கள் முன்வைத்தார்கள்.

அது தொடர்பாக எங்களுக்கு இறுதி முடிவு எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அது ஒன்றும் பெரிய தாமதம் இல்லை; எங்களுக்கு தேவையான கால அவகாசத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம். எங்கள் கட்சியின் தரப்பிலிருந்து தவெகவிடம் எந்த கோரிக்கையையும் அதிகாரபூர்வமாக வைக்கவில்லை. நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதா, இல்லை ஆட்சியில் பங்கேற்பதா என்பது குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், நாங்கள் எப்படி மற்றது குறித்து பேச முடியும்? நீங்கள் சொன்னது போல ஒரு தகவல் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு நாங்கள் இணங்கவில்லை.

ஒரு கட்சியை நடத்துகிறவர்களுக்குத் தான் நெருக்கடியான சூழலில் ஒரு முடிவை எடுப்பது குறித்த சிரமம் தெரியும். அரசியலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லாதவர்கள் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். இதுபோன்ற விஷயங்கள் வருந்தத்தக்கது. நாங்கள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.

எங்களின் வலிமையை உணர்ந்து, பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்து சூழலுக்கு ஏற்ப இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். வெறும் பதவி, அதிகாரம் என்கிற அடிப்படையில் உடனே ஒரு முடிவை எடுத்து விட முடியாது; நிதானமாக தான் முடிவு எடுக்க முடியும். இது மிகப் பெரிய முடிவு; வெறும் பதவிக்கான முடிவாக இதனை எடுத்து விட முடியாது.

எங்களுடைய எதிர்கால அரசியலை கவனத்தில் கொண்டு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறோம் என்பதையும் பரிசீலித்துதான் முடிவு எடுக்க முடியும். ஆனாலும் இன்னும் அந்த கோரிக்கை அப்படியே தான் இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது குறித்த கருத்தை முன்னணி தோழர்கள் இன்னும் வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ஆனால் நான் அது குறித்து ஒரு தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை” என்றார்.

பின்னர், விசிக வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என திமுக அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், “திமுக கூட்டணியில் நின்றுதான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்; திமுக ஒரு கருத்தை சொன்னால் அதை நாங்கள் உடனே புறந்தள்ளி விட முடியாது. அவர்களின் கருத்தையும் பரிசீலிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாக அவர்களுடன் பயணப்பட்டு இருக்கிறோம், பல்வேறு போராட்டங்களில் கை கோர்த்திருக்கிறோம்.

ஒரு கூட்டணியில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது என எங்களின் ஆதரவை கொடுத்திருக்கிறோம், அவ்வளவுதான். அமைச்சரவையில் இடம்பெற்றால் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறி இருக்கிறோம் என்று பொருள். அந்த முடிவை எடுப்பதா, வேண்டாமா என்கிற நெருக்கடி இருக்கிறது. அது தொடர்பாக விவாதிக்க எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படாதா? திரைமறைவில் பேரம் எதுவும் பேசப்படவில்லை” என்று திருமாவளவன் கூறினார்.

தலித் சமூகத்தைச் சார்ந்தவரை முதல்வராக்க தமிழ்ச் சமூகம் தயாராகவில்லை:

இந்த சூழலில், திருமாவளவன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு நான், “அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது” என்று பதிலளித்தேன்.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். “திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.

நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பிஹார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.

எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, “எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன். அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு” ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT