ஷாஜஹான் (இடது), வன்னியரசு (வலது)

 
தமிழகம்

அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு: நனவானது விசிகவின் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ கனவு

அனலி

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு திண்டிவனம் தொகுதியிலும், ஷாஜஹான் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

முன்னதாக நேற்று (மே.21) ஸ்ரீநாத் (தூத்துக்குடி), கமலி.எஸ். (அவிநாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்), வி.காந்திராஜ் (அரக்கோணம்), மதன் ராஜா.பி (ஓட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்), ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்), எம்.விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ (சேலம் தெற்கு), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), குமார்.ஆர் (வேளச்சேரி), தென்னரசு.கே (பெரும்புதூர்), வி.சம்பத்குமார் (கோவை வடக்கு), முகமது பர்வேஸ் (அறந்தாங்கி), டி.சரத்குமார் (தாம்பரம்), என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்), விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு) ஆகிய 23 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து நேற்று மாலை ஐயூஎம்எல் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து இன்று இந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இரண்டு, விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கிய இந்த இரு கட்சிகளும் தற்போது ஆட்சியில் அதிகாரம் பெற்றிருக்கின்றன.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்கக் கூடாது என்று இடதுசாரிகள், விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அந்த 25 பேருக்கும் அமைச்சரவையில் இதுவரை இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றது. இன்று விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இதுவும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT