கடலூர்: திருமாவளவனின் காரில் தொங்கியபடி சென்ற விசிக நிர்வாகியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விசிக சார்பில் வரும் ஆக.17 தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு பணிகளுக்காக மாவட்டம தோறும் திருமாவளவன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் கடலூர் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் உளுந்தூர்பேட்டையில் நடக்க உள்ள மாநாடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருமாவளவனை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த கடலூரை சேர்ந்த விசிக நிர்வாகி ஒருவர், கட்சி தொடர்பாக தலைவர் திருமாவளவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் டிரைவர் காரை இயக்கி விட்டார். திருமாவளவனிடம் பேசி கொண்டிருந்த நிர்வாகி, உடனே காரின் ஜன்னலை கையால் பிடித்து கொண்டு அதில் தொங்கியவாறு சென்றார்.
கார் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நிர்வாகி, காரில் தொங்கியபடியே திருமாளவனிடம் பேசிக் கொண்டே சென்றார். சுமார் 100 மீட்டர் தொலைவு வரை கார் சென்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக திருமாவளவன் கார் டிரைவரிடம் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
இதை தொடாந்து சாலை ஓரமாக கார் நிறுத்தப்பட்டு அந்த நிர்வாகியை அங்கு இறக்கி விட்டனர். இந்த வீடியோவை கடந்த ஜூன் 17-ம் தேதி காரில் தொங்கியபடி சென்ற நிர்வாகியான நகர துணை செயலாளர் பரதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை செல்லும் வழியில் தலைவரை சந்தித்து சிறிது நேரம் உரையாடினேன் என பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.