தமிழகம்

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் திடீர் அறிவிப்பு

வேட்டையன்

சென்னை: “எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், “நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 23-ம் தேதி தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுவதாக உடன்பாடு எட்டப்பட்டது.

தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதில் கட்டுமன்னாகோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.

          

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “சட்டமன்றத்துக்குள் போகலாம் என நான் ஆசைப்பட்டேன். 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும் என நான் கருதுவதாக எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன். அப்போது நான் சட்டமன்றத்தில் இருந்தால் நல்லது என்று நான் நினைத்தேன். இதன் பின்னணியில் வேறு எதுவும் இல்லை.

பாஜகவும் அதிமுகவும் இங்குள்ள சமூக நீதி அரசியலை சீர்குலைக்க பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் சட்டமன்றத்திலும் இருக்க விரும்பினேன். என்னை யாரும் ‘இதை செய், அதை செய்’ என பணிக்க முடியாது. அது எந்த காலத்திலும் நடக்காது. நான் போட்டியிட விரும்பினேன். அவ்வளவுதான்.

கடந்த சில நாட்களாக ஏதோ ஒரு நோக்கத்துடன் சட்டமன்றத்துக்குள் திருமாவளவன் செல்ல பார்க்கிறார் என விவரணை செய்யப்பட்டது. நான் துணை முதல்வராக விரும்புகிறேன் என சொல்லப்பட்டது. இதெல்லாம் எங்கள் கூட்டணியின் நலனை பாதிக்க செய்யும் வகையில் கருத்து பரப்பப்பட்டது.

யுத்த காலத்தில் முன்னே செல்வதும், பின் வாங்குவதும் ஒரு யுக்தி. எனக்கு பதவி ஆசை கிடையாது. கூட்டணி ஆட்சியை நான் கோரமாட்டேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டேன். எனது நோக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சிலர் கருத்து பரப்பினர்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களில் வெல்லும். இதை நான் உறுதியாக சொல்கிறேன். தொங்கு சட்டசபை வரும் என்ற கணக்கில் நான் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது. அந்த கருத்து தவறானது. அதனால் நான் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை. இதை ஒரு யுக்தியாக பார்க்கிறேன். அதை மாற்றி வைக்கிறேன். என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன்.

நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என்றார்.

SCROLL FOR NEXT