சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்தார். துணை வேந்தர் தேடுதல் குழுவில் 3 பேருக்குப் பதில் 5 பேர் இடம்பெறலாம் என்றும் அவர் கூறினார்.
சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி உள்கட்டமைப்பு வசதி, மாணவிகள் விடுதி, உணவு மற்றும் கழிப்பறை வசதிகள், படித்து முடிக்கும் மாணவிகளின் வேலைவாய்ப்பு குறித்து முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:
100 சதவீதம் வேலைவாய்ப்பு
டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவில், கட்டிடக்கலை, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் பெரிய பெரிய நிறுவனங்கள் வந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் மாணவிகளை வேலைக்கு சேர்க்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த மனநிறைவை தருகிறது.
அரசியல் தலையீடு இருக்காது
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். இந்த தேர்வில் ஆங்காங்கே சிறிய குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் என்பது சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு வாரியம். அதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. உதவி பேராசிரியர் தேர்வில் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டதும் அடுத்த தேர்வு பணிகளை தொடங்க உள்ளோம்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன பிரச்சினை குறித்து கேட்கிறீர்கள். துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக முதல்வர் நேற்று கூட விரிவாக ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
துணைவேந்தர் நியமன பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் முன்பு 3 பேர் அதாவது, ஆளுநரின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி, அரசு பிரதிநிதி என மூவர் இடம்பெற்றனர். முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி, கூடுதலாக யுஜிசி பிரதிநிதி ஒருவரும் தேடுதல் குழுவில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மூவர் குழு என்பது ஐவர் குழுவாக விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஐவர் குழு அமைக்கப்பட்டதும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர் என நம்பிக்கை அரசுக்கு உள்ளது. காலம் காலமாக பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே இருந்து வருகிறார். வேந்தராக தமிழக முதல்வர் இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.