தமிழகம்

வருசநாடு மலைப் பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

வனத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை

என்.கணேஷ்ராஜ்

வருசநாடு: மலைக் கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து வருசநாடு அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 26-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, கீழபூசனூத்து, மேலபூசனூத்து‌ உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் பல்வேறு கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சிங்கராஜபுரத்தில் மலைக் கிராம மக்கள் மற்றும் வன உரிமைக்குழு சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

வன உரிமை மீட்பு குழு தலைவர் தங்கமலை தலைமை வகிக்க, உறுப்பினர் லிங்கம் முன்னிலை வகித்தார். பல தலைமுறையாக இங்கு வாழ்ந்து வனத்தையும், விலங்குகளையும் பாதுகாத்து வந்துள்ளதால் 2006 வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்க வேண்டும், வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராம முக்கியஸ்தர்கள் பாண்டி, மனோகரன், பிரபாகரன், மேல பூசனூத்து வன உரிமை மீட்பு குழு தலைவர் கண்ணன், செயலாளர்கள் அறிவழகன், அன்பழகன், மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், பாலமுருகன், கேபிள் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

இது குறித்து இவர்கள் கூறுகையில், “98 கிராம மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறோம்.

மலைப் பகுதியை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதன் ஒருபகுதியாக கடமலைக்குண்டு பேருந்து நிலைய பகுதியில் மலைக் கிராம மக்கள் ஒருங்கிணைந்து வரும் 26-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT