விருதுநகர்: ஆதாரங்களின் அடிப்படையில்தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே உள்ள அயன்ரெட்டியாபட்டியில் நேற்று நடைபெற்ற பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் வன்னியரசு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சமூகநீதி துறையின் சார்பாக 67 புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவை முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்படும்.
தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது. விலையைக் குறைப்பதற்கும், தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைப்பதற்கும் உணவுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இடைக்கால பட்ஜெட்டில் சமூகநீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சி மிகச் சிறப்பாக நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. ‘வந்தே மாதரம்’ பாடலைத்தான் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சூழலில், நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் பாடுவோம் என்று உறுதியாக நின்றவர் முதல்வர் விஜய். இந்த அரசு மாநில உரிமைகளை முழுமையாக பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
கர்நாடகா, நாகா: லாந்து ஆகிய மாநிலங்களுக்கு தனிக் கொடிகள் உள்ளன. அங்கு தேசிய கொடியின் அருகிலேயே மாநில கொடிகளையும் ஏற்றுகிறார்கள். அது சட்டப்படியும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்துக்கென தனிக் கொடி வைத்திருப்பது, அந்த இனத்தின் உரிமையை பிரதிபலிக்குமே தவிர, அது தவறான கருத்தோ அல்லது கொள்கையோ அல்ல.
இதில் விசிகவுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கைகள் குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறியுள்ளனர். ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. விசாரணை முடிவில்தான் உண்மை என்னவென்று தெரியவரும். இது எந்த வகையிலும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இவ்வாறு அமைச்சர் கூறினார்.