ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். உடன், மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோர்.
ராமேசுவரம்: சென்னை-ராமேசுவரம் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.90.20 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் 2022 மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேசுவரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையமாக மாற்றப்பட்டு, கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பயணிகளுக்குத் தேவையான வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன. இன்னும் ஒன்றரை மாதத்தில் பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ரயில் நிலையம் கொண்டு வரப்படும்.
ராமேசுவரத்திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இரும்பு தூக்குப் பலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.
தூக்குப் பாலத்தை பாதுகாப்பான முறையில் அகற்றி, அதை ராமநாதபுரம் அருகே பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அனுமதி கிடைத்த பின்னர் ரயில் பாதை அமைக்கும் பணிகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.