கோவை: “எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி ஜனநாயகன் படத்தைப் பற்றி பேசுகின்றார் என பாஜக் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் பா.ஜ.க சார்பில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ‘தாமரை கோல திருவிழா’ என்ற பெயரில் கோலப்போட்டிகள் நடந்து வருகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று (ஜன.13) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பொங்கலை ஒட்டி ‘தாமரைக் கோல திருவிழா’ நடத்தப்படுகிறது. இதை பிரதமரின் திட்டங்களை உரையாடும் நிகழ்வாக நடத்துகிறோம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ஒரிஜினல் பராசக்தி திரைப்படம் வந்தது. கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு இரண்டு நாட்கள் மவுண்ட் ரோட்டில் உள்ள திரையரங்கில் சென்சார் செய்து 130 கட் கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தை வைத்திருக்கும் ராகுல் காந்தி, எமர்ஜென்சியை கொண்டு வந்து குரல் வலையை நெறித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி ஜனநாயகன் படத்தைப் பற்றி பேசுகின்றார். ஜனநாயகன் படத்திற்கு கட் கொடுத்திருக்கின்றனர். இது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது என தெரிந்தும், வேண்டுமென்றே ஏதாவது ஒரு வழியில் பாஜகவை குறை சொல்ல வேண்டும் என ராகுல்காந்தி கருத்து சொல்லியிருக்கிறார்.
என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி என்டிஏ.அணியின் முதல் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதற்குப் பின்னர், இன்னும் கூட்டணிக்கு பலர் வருவார்கள். பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் தேசிய தலைவர் கோவை வந்த பொழுதே பேசியிருக்கிறோம். டெல்லியில் எல்லோரும் நாளை சந்திக்க போகிறோம். இது எல்லாம் தொடர்ச்சியான ஒரு நடைமுறைதான். இவ்வாறு அவர் கூறினார்.