புதுடெல்லி: கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவிக்க ஓர் அமைப்பு அவசியம் என்று நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் வலியுறுத்தினார். அதன்படி பாரதிய ஞானபீடம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.
கடந்த 1965-ம் ஆண்டு முதல்ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலன், 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞான பீட விருதைப் பெற்றனர். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தொகை, பாராட்டு பத்திரம், ஞானதேவதை வெண்கல சிலை ஆகியவை வழங்கப்பட உள்ளன.
கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தற்போது 60-வது ஞான பீட விருது இவருக்கு கிடைத்துள்ளது.
முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ஞானபீட விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வைரமுத்து வாழ்த்து பெற்றார்.