தமிழகம்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? - இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் வைகோ

செய்திப்பிரிவு

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவிக்கவுள்ளார்.

கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டன.

மேலும், தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்கள் தவிர மற்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், திமுக மற்றும் மதிமுக இடையே கடந்த சில மாதங்களாகவே ஒருவித மோதல் போக்கு நிலவி வருகிறது.

சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வைகோ, தன்மானத்தையும் சுய மரியாதையையும் இழந்துதான் கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்ததாக வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வைகோவும், அவரது மகனும் கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோவும், தவெக அரசை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான நிலையில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், கடைய நல்லூர் எம்எல்ஏ தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்ட 18 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்றும், அதற்கு வசதியாக மதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வது என்றும் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கோயம்பேட்டில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் வைகோ அறிவிப்பார் என தெரிகிறது. சீர்காழி எம்எல்ஏ புறக்கணிப்பு இதற்கிடையே, நேற்று நடைபெற்ற உயர் நிலைக்குழு கூட்டத்தில் மதிமுகவின் சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தும் அவர் கூட்டத்தைப் புறக்கணித்ததால், அவரிடம் விளக்கம் கேட்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதேநேரம், தவெகவுடன் கூட்டணி வைப்பதில் செந்தில்செல் வனுக்கு விருப்பம் இல்லாததால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT