கோவை: “என்னை வடிவேலு என்று விமர்சிக்கின்றனர். வடிவேலு சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்தார். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்து, அவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். வடிவேலுவின் வாழ்வை நாசமாகியவர்கள் திமுகவினர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், “கிரீஸ் திருமணச் செலவு குறித்து யாராவது கேட்டீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவை டாடாபாத் பகுதியில் இன்று (நவ.21) செய்தியாளர்களிடம் கூறியது: “கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு இரங்கல் நிகழ்வில், முதல்வர் அருகே நான் சென்றபோது, ஒருவர் என்னை பின்னே இழுத்தார். அவர் அமைச்சரா எனத் தெரியாது. உன் வேலையை பார்த்துவிட்டு போ எனக் கூறிவிட்டேன். முதல்வர் மீது ஒரு துரும்பு கூட விழக் கூடாது என்று அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். நான் கொடுக்கின்ற பாதுகாப்பு 100 பேர் கூட கொடுக்க முடியாது.
நான் யாரையும் திட்டவில்லை. திராவிட இயக்கத்துக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்லி திமுகவுக்கு சென்றோம். ஆனால், எங்களை அவமானம் செய்தார்கள். ஆட்களே இல்லாத கட்சிகளுக்கெல்லாம் அதிக சீட்டுகள் கொடுக்கப்பட்டன. புண்படுத்தப்பட்ட பிறகு ஒட்டுமொத்த முடிவாக நாங்கள் வெளியேறினோம்.
என்னுடைய இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் அத்தனை விமர்சனங்களையும் நான் தாண்டி தான் வந்துள்ளேன். முதல்வருடன் நான் சென்றதை சகித்துக் கொள்ள முடியாத திமுக வட்டாரத்தினர், அதற்கு எதிராக பேசுகிறார்கள்.
இந்தியாவிலேயே சிறப்பான திருமண மண்டபம் சென்னையில் உள்ளபோது, கிரீஸ் நாட்டிற்குச் சென்று திருமணம் செய்துள்ளார்கள். ரஜினிகாந்த் என்ற மாமனிதன் 1996 அரசியலில் என்ன சொன்னார் என்று நான் சொல்லட்டுமா? கிரீஸில் நடந்த அந்த திருமணத்துக்கு வந்த அனைத்து முக்கியஸ்தர்களும் விமான நிலைய டிக்கெட்டுகள் எடுத்து, நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து எத்தனை ஆயிரம் கோடி செலவு அளித்தீர்கள்? இதனை பற்றி யாராவது கேள்வி எழுப்பினீர்களா? அவர்கள் அரசியலில் உள்ளதால் நான் இதைப் பற்றி கேட்கிறேன். சினிமாவில் மட்டும் அவர்கள் இருந்திருந்தால் நான் இதைப் பற்றி பேசி இருக்க மாட்டேன்.
1991-ல் இருந்து திமுக ஆட்சி முடியும் வரை நடந்த கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், என்கவுன்டர்கள் என க்ரைம் டேட்டாவை நான் எடுத்து வைத்துள்ளேன். அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பணத்துக்காக நடத்தப்பட்ட அந்தப் படுகொலையில் காவல் துறை கூலி வேலை செய்தது மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம்.
36 ஆண்டுகால குற்ற சம்பவங்களை நான் தொகுத்து வைத்திருக்கிறேன். எந்த மேடையிலும் அதைப் பற்றி பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன். என்னுடன் நேருக்கு நேர் சமமாக வாதிட எந்த மேடைக்கும் அவர்களது கட்சி ஜாம்பவான்கள் வரலாம். எந்தெந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டது என்று என்னிடம் டேட்டா உள்ளது.
என்னை வடிவேலு என்று விமர்சிக்கின்றனர். வடிவேலு சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்தார். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்து, அவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். வடிவேலுவின் வாழ்வை நாசமாகியவர்கள் திமுகவினர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் மனதை காயப்படுத்துகிறது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத ஒரு புதுமையாக நீதியரசர்கள் சமூக ஒற்றுமை குறித்த சிந்தனை சிறிதும் இல்லாமல், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுத்தது துரதிஷ்டவசமானது. இது சிறுபான்மையின மக்களின் மனதை காயப்படுத்தும் செயல்.
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிகளில் சட்டம் - ஒழுங்கு படு பயங்கரமான நிலைக்கு பாழானது.
மதிமுகவை கரைத்து விடுவார்கள் என்று திமுகவினர் சிலர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். எங்கள் கட்சியை யாராலும் கரைக்க முடியாது. இன்னும் வீறு கொண்டு எங்கள் கட்சி எழும்.
மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்கு உரிய விதத்தில் போராடுவோம்.
தமிழகத்துக்கு வரக்கூடிய முதலீடுகள் ஆந்திராவுக்கு ஒன்றும் செல்லவில்லை. இதை விட ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியில் அதிகமாக சென்றது.
தமிழக அதிகாரிகளுக்கு வழக்கமாக வந்த கஜானா, விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் தடைபட்டுவிட்டது. ஒரு சில அரசு அதிகாரிகள் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகம் காசு வாங்கி பழக்கப்பட்டு போன அதிகாரிகள் இந்த அரசுக்கு உதவி செய்யாதது மட்டும் அல்லாமல் அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, மல்லை சத்யா குறித்தான கேள்விக்கு, ‘முட்டாள்களின் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்று கூறினார். இந்நிகழ்வின்போது மதிமுக கோவை மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.