வைகோ

 
தமிழகம்

“முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போதும் எனக்கு இல்லை” - மனம் திறந்த வைகோ

என். சன்னாசி

மதுரை: “தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போது எனக்கு கிடையாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் நகைக்கடை திறப்பு விழா நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று புதிய கடையை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டாக மதிமுகவை நடத்துகிறேன். எனது தம்பிகள் துணை நிற்பதால் தொடர்ந்து கட்சி செயல்படுகிறது. முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராடினேன்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார். நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேசவேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மிரட்டுகிறார். அவரது உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது.

தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க நினைக்கின்றனர். திமுகவை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

எதிர்கட்சிகளை நசுக்க பார்க்கிறது பாஜக. தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர். திமுகவை உடைத்து துடைத்து எறிவோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். அவரை விட 100 மடங்கு சக்தி கொண்டவர்களை திமுக எதிர்க்கொண்டுள்ளது. அமித் ஷா கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, கவனத்துடன் பேச வேண்டும்.

மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து இந்தியாவை பாஜக துண்டாட பார்க்கிறது. திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையை வைத்துக் கொண்டு தமிழகத்தில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்படுகிறது. இதே எஸ்ஐஆர் மூலம் 65 லட்சம் வெளிமாநில புதிய வாக்காளர்களை தமிழகத்தில் சேர்க்க திட்டமிடுகின்றனர். இது மோசடி திட்டம்.

தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எனக்கு எப்போதும் கிடையாது. அதுபற்றி என்றுமே நான் பேசியதுமில்லை. மத்தியில் இரு முறை கேபினட் அமைச்சர் வாய்ப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொடுத்தும் ஏற்கவில்லை.

விஜய் சினிமாவில் எழுதி கொடுத்து வாசனங்களை பேசுவது போன்று பேசுகிறார். எம்ஜிஆர் வளர்ந்தார் என்றால் திமுகவின் கிளைக் கழகமாக அவர் செயல்பட்டார். அவர் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தார்.

சினிமாவில் நடிக்கும்போது, நெற்றியில் உதயசூரியனை வரைந்து இருப்பார். கட்சியில் அமைப்பாக இருந்து சிறு மனவேறுபாட்டில் வெளியேறி அதிமுகவை தொடங்கி வெற்றி பெற்றார். அவர் போன்று ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட விஜய் இல்லை.

தவெக விஜய்யின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் அவர் கடலில் கடக்க முயல்கிறார். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார். அது வெறும் மண் கோட்டையாகவே போகும். பொது வாழ்வில் விஜய் நினைக்கும் இடத்திற்கு வரமுடியாது” என்று வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT