மதிமுக பொதுச் செயலர் வைகோ |கோப்புப் படம்

 
தமிழகம்

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நடந்து கொண்ட விதம் நியாயமல்ல” - வைகோ

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: நூறு ஆண்டுகளாக கோயிலுக்கு அருகிலேயே தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வேறு இடத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நியாயமல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”மேல்நிலை மாநிலங்கள், கீழ்நிலை மாநிலங்களுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க சட்டப்படியோ, ஹெல்சின்கி விதிகளின்படியோ எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் அகந்தையுடன் செயல்படுவதற்கு, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசே காரணம். பாஜக எம்பி அனந்தகுமார் வீட்டில் நடந்த கூட்டத்தில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெளிப்படையாக அனுமதி தர மாட்டோம் என்றும் ஆயத்தப் பணிகளை செய்யுமாறும் கூறியதால், தற்போது ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்து அணை கட்டும் நாளை கர்நாடகம் எதிர்பார்த்துள்ளது. கர்நாடகத்தில் பாஜக காலூன்றுவதற்காக அணை கட்ட மறைமுகமாக மத்திய அரசு ஊக்குவித்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறது.

மாநிலங்களுக்கான வளங்களை அந்தந்த மாநிலங்களே வைத்துக்கொள்ளும் நிலை வந்தால், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, விஜயநாராயணம் கடற்படைத் தளம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவையும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற நிலை உருவாகும். சோவியத் யூனியன் உடைந்தது போன்ற நிலை இந்தியாவிலும் எதிர்காலத்தில் ஏற்படும் எச்சரிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியது போல இன்றைய பிரதமர் மோடியிடமும் கூறுகிறேன்.

கர்நாடகா மற்றும் மோடி அரசை கண்டித்து தஞ்சாவூரில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் முதல் கட்டப் போராட்டமாகும். பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஐந்து விவசாய சங்கங்களும் பங்கேற்கின்றன. தொடர்ந்து காவிரி டெல்டா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக் கூடாது. தற்போதைய எண்ணிக்கையே தொடர வேண்டும். வட மாநிலங்களுக்கு அதிக இடங்களை வழங்கித் தங்களுக்கு ஏற்ற திட்டங்களை நிறைவேற்றவும், ஜனநாயகத்தை சீர்குலைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டமும் இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதிகாரப் பிரிவினை கோட்பாட்டின்படி நீதித்துறை, நிர்வாகத் துறை, சட்டமன்றம் தனித்தனியாக செயல்பட வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் நூறு ஆண்டுகளாக கோயிலுக்கு அருகிலேயே தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வேறு இடத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நியாயமல்ல.

உச்சநீதிமன்றம் நடந்து கொண்ட விதம் நியாயம் அல்ல, நீதி அல்ல, மதச்சார்பின்மையை காக்கின்ற போக்கும் அல்ல. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவது, ஜோசப் விஜய் அரசாங்கத்தின் நேர்மையான போக்குக்கு எடுத்துக்காட்டு" என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT