வைகோ
படம்: எம்.லட்சுமி அருண்
தென்காசி: “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். வாக்குகள் எண்ணி முடித்த பிறகுதான் தவெக வாங்கும் வாக்குகள் யாருக்கு பாதிப்பாக இருக்கும் என்பதை சொல்ல முடியும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் வைகோவின் துணைவியார் வேணுகாதேவி ஆகியோர் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “இந்த தேர்தலின் முடிவுகள் எவ்விதம் அமையும் என தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை பெறுவார்கள். திமுக தனது சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் என்று பிரச்சாரத்தில் சொல்லி வந்தேன். அதே கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.
கூட்டணி அமைச்சரவை என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 190 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். வாக்கு எண்ணி முடித்த பிறகுதான் தவெக வாங்கும் வாக்குகள் யாருக்கு பாதிப்பாக இருக்கும் என்பதை சொல்ல முடியும்” என்றார்.