வைகோ

 
தமிழகம்

“இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” - வைகோ தகவல்

செய்திப்பிரிவு

“வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் நாசத்துக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

பாலியல் வன்கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில், இந்த தேர்தலுக்கு பின்னர் அமையும் திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதனை அரசியலாக்கி திமுக மீது சிலர் பழி தூற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இதனை விட அதிகமாக நடந்தது.

          

“வரும் தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை ஸ்டாலின் இழந்து விடுவார்” என, பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறினார். ஆனால், 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியாவின் தலைமை அமைச்சர் நாற்காலியில் நரேந்திர மோடி உட்கார வாய்ப்பே கிடையாது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவது இல்லை. திமுக-வில் மற்ற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், மதிமுக-வுக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியும்.

ரஜினிகாந்த் நன்கு யோசித்துப் பார்த்து முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார். புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கற்பனையாக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி-க்கள் வலியுறுத்தியுள்ளது சரியான நடவடிக்கை. அப்படி நடந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT