காரைக்குடி: திமுகவுடன் உறவு அறுந்துவிட்டது; முடிவுக்கு வந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடம் இல்லை. அரசியல் கட்சிகள் காலத்துக்கு ஏற்ப தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவது வழக்கம்தான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் எம்.பி.களின் தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும். தொகுதி மறுவரையறையை அனுமதிக்கக் கூடாது என்று பேசிய திமுக தற்போது நியாயமான மறுவரையறையாக இருக்க வேண்டும் என்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது வருத்தமளிக்கிறது.
இந்துத்துவா சக்திகள், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்க்கவே காங்கிரஸை ஆதரிக்கிறோம். அதே நம்பிக்கையில்தான் தவெகவுடன் உடன்பாடு வைத்துள்ளோம். திமுகவுடன் உறவு அறுந்துவிட்டது; முடிவுக்கு வந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமே இல்லை. அரசியல் கட்சிகள் காலத்துக்கு ஏற்ப தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவது வழக்கம்தான். கடந்த தேர்தலில் மதிமுகவை திமுக நடத்திய விதத்தால் கூட்டணியில் தொடரக் கூடாது என்ற பொதுக்குழுவின் முடிவு அடிப்படையில் வெளியேறினோம்.
எல்லாக் காலங்களிலும் கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. கொலைகளை உடனே போலீஸாரால் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸார் மீது குற்றவியல் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலிருந்து நெடுந்தூரத்தில் விமானநிலையம் அமைப்பது சரியானதல்ல.
சட்டப்பேரவையில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைவிட கடந்த காலங்களில் மோசமான மோதல்கள் நடந்துள்ளன. நேரடி ஒளிபரப்பால் மக்கள் அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வது வரவேற்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பால் சில நன்மைகள் ஏற்படலாம். அதே நேரத்தில் பல கேடுகளும் ஏற்படும். எனவே, சாதிவாரிகணக்கெடுப்பு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.