நடைபயணத்துக்கான கொடியை அறிமுகம் செய்த வைகோ. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: மதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதிமுக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையிலான சமத்துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.
அதன்படி 190 கி.மீ. வரை நடைபெறும் நடைபயணத்தை, திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, இந்துக்கள் வழிபடும் கோயில், கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, சீக்கியர்கள் வழிபடும் குருத்வாராக்கள் அடங்கிய சின்னங்கள் பொருந்திய சிவப்பு, மஞ்சள் நிற கொடியை எனக்கு வழங்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சமத்துவ நடைபயணத்துக்காக மதிமுக தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.