மல்லை சத்யா

 
தமிழகம்

“தவெக பக்கம் செல்ல பெட்டி படுக்கையுடன் தயாராகிவிட்டார் வைகோ” - மல்லை சத்யா

வெற்றி மயிலோன்

சென்னை: “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. முதல்வர் விஜய்யை அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டு பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் போட்டி என சொன்னார். மேலும், அல்லு சில்லுகளுக்கு இடமில்லை என சொன்னார், அதில் மதிமுகவும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

திமுகவின் தயவால்தான் வைகோ நாடாளுமன்றத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றினார். 24 ஆண்டு காலம் மாநிலங்களவையிலும், 5 ஆண்டு காலம் மக்களவையிலும் அவர் பணியாற்றினார் என்றால், திமுகதான் அந்த வாய்ப்பை பெற்று தந்தது. வைகோவின் மகன் இன்று திருச்சியில் மக்களவை உறுப்பினராக இருக்கிறார் என்றால், அதற்கும் திமுக தான் காரணம். சின்னப்பிள்ளை போன்று வைகோ பேசுவதை ஏற்க முடியாது.

எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என விசிக சொன்னது. இடதுசாரிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். உரிய தொகுதிகள் கிடைக்காததால், சுய மரியாதையோடு வெளியே நிற்கிறோம் என மக்கள் நீதி மய்யம் சொன்னது. ஆனால், சுயமரியாதை பற்றி வாய் கிழிய பேசும் வைகோ ஏன் அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என அவர்தான் சொல்லவேண்டும். அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என சொல்ல வேண்டும்.

ஒருவேளை இப்போது திமுக வெற்றி பெற்றிருந்தால், வைகோ என்ன பேச்சு பேசுவார் என எங்களுக்குத் தெரியும். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல வாய்ப்புகளை பெற்று அவர் பயனடைந்தார் என்பதை மறுக்க முடியாது. இன்று திமுக ஆட்சியில் இல்லை என்பதால், அவதூறு பரப்புவதும், சேற்றை வாரி பூசுவதும், தவெகவை திராவிட வெற்றிக் கழகமாக நாங்கள் பார்க்கிறோம் என துரை வைகோ பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

SCROLL FOR NEXT