திண்டுக்கல்: “தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையால்தான் திமுக ஆட்சியை இழந்தது என்பது தவறானது, முரணானது, உண்மைக்கும் எதிரானது. எஸ்ஐஆர் இல்லாமல் முறையாக தேர்தல் நடத்திருந்தால், திமுக இதைவிட தோல்வியடைந்திருக்கும். விஜய் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிகார போதை தலைக்கேறிய நிலையில், இந்த நாட்டுக்கு இந்தி மட்டும்தான் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் பேசுவதும், நாங்கள் தான் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்பதும் அவரது பண்பாட்டை மீறி எல்லை மீறிய மமதையைக் காட்டுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறார். கேரளாவில் அவர் பணிபுரிந்தபோது பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர். தான் சொல்லும்படி ஆடுவார் என்றுதான் இவரை தலைமைத் தேர்தல் ஆணையராக்கியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு, மத்திய அரசின் கையாளாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்பட்டார். ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யவைக்க வேண்டியது மத்திய அரசு.
தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையால்தான் திமுக ஆட்சியை இழந்தது என்பது தவறானது, முரணானது, உண்மைக்கும் எதிரானது. தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தவர்கள் அனைவரும் திமுக நிர்வாகிகள். திமுக அரசு விருப்பப்படிதான் இது நடந்தது.
டெல்லியில் போராட்டத்துக்கு பிறகே திமுக எஸ்ஐஆரை எதிர்த்தது. எஸ்ஐஆர் இல்லாமல் முறையாக தேர்தல் நடத்திருந்தால், திமுக இதைவிட தோல்வி அடைந்திருக்கும். விஜய் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார். தமிழகத்தில் எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகவினர் தான் காரணம். எஸ்ஐஆர் அடியோடு மாற்றப்படவேண்டும்.
ஊழல் அற்ற ஆட்சி நடத்துவேன் என்பதில் இருந்து முதல்வர் விஜய் இதுவரை பின்வாங்கவில்லை. ஊழலில் ஊறிய அதிகாரிகள் இந்த அரசை எப்படி ஸ்தம்பிக்க வைக்கலாம் என பார்கின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை அதிபருக்கு திமுக, அதிமுக ஆட்சியில் ஆதரவாக இருந்தனர். ஆனால் ஸ்டெர்லைட் அதிபர் சந்திப்பதற்கு முதல்வர் இடம் கொடுக்கவில்லை. இந்த ஓர் அத்தாட்சி போதும், முன்பிருந்த அரசுகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருந்தன.
ஆங்காங்கே கொலை நடக்கிறது, பாலியல் வன்கொடுமை என்பது எல்லா ஆட்சியிலும் நடக்கிறது.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வந்து ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகளில் கடையை மூடிவிட்டு போயிருக்கிறார்கள். பட்டியல் போட்டால் ஒரு 15 பேரைச் சொல்லலாம். அவ்வளவு செல்வாக்கு பெற்றவர்கள் நாங்கள், இவ்வளவு சிரமத்துக்கு மத்தியிலும் எவ்வளவோ துரோகம் செய்தாலும், இந்தக் கட்சியை சோதனைகளுக்கு மத்தியில் நடத்தி வருகிறோம்.
ராஜபக்சேவை அழைத்த ஒரு காரணத்துக்காக கூட்டணியை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்த கட்சி மதிமுக. நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். எந்தக் கட்டத்திலும் மாறாமல் உறுதியாக இருப்பதால்தான் என்னுடன் உறுதியாக இருக்கிறார்கள்.
என்னுடைய நாடாளுமன்ற உரைகள் புத்தகமாக டெல்லியில் வெளியிடப்பட்டது. இதன் தமிழாக்கம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
விலைவாசி கூடியிருப்பது, பணவீக்கத்தின் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது என்பது உண்மை. ஆனால், ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து சன்னரக அரிசி என வழங்குகிறார்களா என எனக்குத் தெரியாது. விடிந்தால் என்ன குற்றச்சாட்டு வைக்கலாம் என வரிந்து கட்டிக்கொண்டு பல கட்சிகள் உள்ளன.
அவர்கள் நிர்வாகத்துக்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படியாவது இந்த ஆட்சியை நிலைகுலையச் செய்துவிடலாமா என நினைக்கின்றனர். அது நடக்காது. விஜய் ஆட்சி தொடர்ந்து நடக்கும்.
சன்னரக அரிசி பிரச்சனை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு இதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகளை சரிசெய்ய வேண்டும் என முதல்வருக்கு தெரிவித்துள்ளேன்.
விலைவாசி எல்லா ஆட்சியிலும் உயர்ந்துள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் உயரும். இது உலகளாவிய பிரச்சினை. இதற்கு முன்பு எந்த முதல்வர் விலைவாசியை குறைத்தார்? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோயில் ஆண்டி மாதிரி, விஜய் கிடைத்துள்ளார் என எல்லோரும் துவைத்து எடுக்கின்றனர்" என்று வைகோ கூறினார்.