வைகோ | கோப்புப் படம் 
தமிழகம்

“பிரதமர் மோடி தந்திரசாலி” - வைகோ சொல்கிறார்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தந்திரசாலி, தமிழகத்தை ஏமாற்றப் பார்க்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மண்டல மதிமுக தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகளிடம் இருந்து ரூ.1.80 கோடி நிதியை பெற்றுக்கொண்டார்.

          

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 26 ஆண்டுகளாக தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். ஆலையைத் திறக்க முயற்சித்தால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி மிகப்பெரிய அறப்போராட்டத்தை முன்னெடுப்பேன்.

வரவிருக்கும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அழைப்பு விடுத்த 3 மணி நேரத்துக்குள் இந்த குழு பேச்சுவார்த்தைக்கு செல்லும். முதல்வர் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஓபிஎஸ் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. தனது தன்மானத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் காத்துக்கொள்ள அவர் எடுத்த முடிவு சரியானது. அதை வரவேற்கிறேன்.

வாஜ்பாய் சிறந்த ஜனநாயகவாதி. மதச்சார்பின்மையை மதித்தவர். பிரதமர் மோடி தந்திரசாலி, அவர் தமிழகத்தை ஏமாற்ற பார்க்கிறார். வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவுக்கும், இப்போதைய பாஜகவுக்கும் மிகப்பெரிய வித்யாசம் உள்ளது. தேசிய கீதம் அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டது. ஆனால், வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாடுவதில் சிக்கல் உள்ளது. இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என தெரிவித்தார்.

‘கழுவுற மீனில் நழுவுற மீன்’

தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது கூற இயலாது என்று கூறிய வைகோ, 6-வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆவீர்களா? என்ற கேள்விக்கு , ‘‘கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நான். அது குறித்து கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT