கூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார்.
ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நமது கட்சிக்கு எத்தனையோ சோதனைகள், துர்பாக்கியங்கள் நிகழ்ந்துள்ளன. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கட்சி முடிந்ததாக சிலர் விமர்சனம் செய்தார்கள்.
இதை உடைக்க நடைபயணம் மேற்கொள்ள ஒரு மாதமாக திட்டமிட்டு முடிவு செய்தேன். கடந்த காலத்தில் நான் சில பிழைகளை செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். எனது நம்பகத்தன்மையை நானே நாசமாக்கிக் கொண்டேன். எனது அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மை சுக்குநூறாகியது. என்னை 19 மாதம் சிறையில் அடைத்த அதிமுக பொதுச்செயலாளரோடு மீண்டும் கூட்டணி வைத்தது பிழையான, மன்னிக்க முடியாத முடிவு.
அப்போது, நாம் திமுகவுடன் கூட்டணி வைத்தால், ஒரு தொகுதியை கூட ஜெயிக்க முடியாது என கருத்துக்கணிப்பு வெளிவந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களை பெறமுடியும் எனவும் தெரியவந்ததால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
நம் கட்சியை வளர்க்க இதுபோன்ற சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது என்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். இந்த முடிவால் ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகியைப்போல என்னை நானே அழித்துக் கொண்டேன். அந்த முடிவே படுபாதாளத்தில் தள்ளிவிட்டது.
தற்போது ஒரு நடிகருக்கு கூடும் கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் நமக்காக கூடியது. ஆனால் தொடர் தோல்விக்கு பிறகு கூட்டம் கலைந்தது. வரும் தேர்தல் நமக்கு அக்னி பரிட்சை. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுகவுடன் கூட்டணி என்று முடிவெடுத்த பிறகு யாரும் திமுகவையும், ஆட்சியையும் விமர்சிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.