தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இதனால் அதிமுக இன்னொரு பிளவை நோக்கி அப்பட்டமாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச் செல்வனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவரது பதில்கள் இங்கே:
அதிமுக இன்னொரு பிளவை நோக்கி வேகமாக நகர்கிறதோ?
தவெக-வை ஆதரிப்போம் என்பது தான் சி.வி.சண்முகம் தரப்பு சொல்கிறது. இப்போது இருக்கிற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக-வை ஆதரிக்காது அதிமுக என்று சொல்லி இருக்கிறார். ஆக இரண்டு தரப்பும் பிளவுபட்டு நிற்பது வெட்ட வெளிச்சம். ஆனாலும் அதிமுக ஒன்றுபட்டுத்தான் இருக்கிறது. எம்எல்ஏ-க்கள் தான் பிளவுபட்டு நிற்கிறார்கள்.
திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முடிவை அதிமுக எப்படி எடுத்தது... யார் இந்த முடிவை எடுத்தார்கள்?
இது அரசல் புரசலாகப் பேசப்பட்ட விஷயம் தான். 3 முக்கியக் கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. அதனால், ஆட்சியமைக்க முடியாத தடுமாற்ற நிலை தவெக-வுக்கு. அதனால், திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் அழைக்கப்படுவார்கள் என்ற கருத்தை ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு தரப்பிலும் ஒரு நிலைப்பாட்டை நோக்கிச் செல்வதாக ஒரு செய்தி வெளியானது.
உண்மையில் அப்படியான ஒரு ‘மூவ்’ நடந்ததா இல்லையா?
உறுதியிட்டு, அறுதியிட்டு சொல்லமுடியாது என்றாலும் அப்படியொரு பூடகமான பேச்சு உலா வந்தது.
பூடகமாக வெளி வந்தாலும் அதிமுக தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் அப்போது அதை மறுக்கவில்லையே?
ஏன் மறுக்கவில்லை என்றால், எங்களைப் போன்றவர்களை ஊடகங்களில் இது விஷயமாக எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் மறுப்புச் சொல்லவில்லை.
திமுக-வும் அதிமுக-வும் திருமாவை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டது உண்மையா?
அதுவும் செவிவழிச் செய்திதான்.
தவெக-வை ஆட்சியமைக்க விடக்கூடாது என்பது தான் இந்த நகர்வுகளின் ஒட்டுமொத்த நோக்கமா?
அப்படியல்ல... தவெக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருந்த போது, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
எதிரெதிர் நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது. மகாராஷ்டிராவிலும் பிஹாரிலும் அப்படி நடந்திருப்பதாக முன்னுதாரணங்கள் சொல்லப்பட்டது. இதெல்லாம் தான் வெளியில் வேறு மாதிரியாக கசிந்துவிட்டது.
ஒருவேளை, திமுக தயவில் அதிமுக ஆட்சி அமைத்திருந்தால் என்னவாகி இருக்கும்?
தற்கொலை முயற்சியாகி இருக்கும். இரண்டு கட்சிகளுமே மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை இழந்திருக்கும்.
இந்த முயற்சி அதிமுக-வை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்று பழனிசாமிக்கு தெரியாதா?
தெரியுங்க... அதனால் தான் இன்றைக்கு அதை வதந்தி என்கிறார்.
வதந்தி என்றால் “இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும்” என்று பழனிசாமி எதைச் சொன்னார்?
தவெக-வுக்கு ஆதரவளிப்பதாக அவர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். அதைக்கூட அப்படி சொல்லி இருக்கலாமே.
ஆனால், இரண்டு நாட்களாக விஜய்யின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அப்படியான முயற்சி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லையே?
வெளியில் சொல்லமுடியாத சில ரகசியங்கள் இதில் இருக்கிறது. சில காரணங்கள் கருதி அதையெல்லாம் வெளிப்படையாக பேசமுடியாது.
அமைச்சர் பதவிக்காகத்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் தவெக-வை ஆதரிக்கும் முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறாரே ஓ.எஸ்.மணியன்?
அமைச்சர் பதவி தருவார்களா என்றே தெரியவில்லை. இருப்பினும், ஓர் அதிகாரத்தை நோக்கி நகர்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
அதிமுக என்பது எம்எல்ஏ-க்கள் மட்டுமல்ல என்று சொல்லி இருக்கிறாரே பழனிசாமி?
ஆமாம். பொதுக்குழு, செயற்குழு, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் என அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இருக்கிறார்கள். ஒரு கோடிக்கு மேல் வாக்களித்த மக்கள் இருக்கிறார்கள். இது எல்லாமும் தான் அதிமுக. 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்கள் மட்டுமே அதிமுக அல்ல. அதேசமயம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.
தவெக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக என்ற கட்சி எப்படி எடுத்துக் கொள்ளும்?
தவெக-வை எதிர்த்து நின்று வெற்றிபெற்றுவிட்டு அந்தக் கட்சியின் ஆட்சியில் பங்கெடுப்பது என்பது முரண்பாடான விஷயம் தான்.
தேர்தலுக்கு முன்பே கட்சிக்குள் இருந்த கொதிநிலை தான் அதிமுக-வின் இப்போதைய பிளவுக்கு பிரதான காரணம் என எடுத்துக் கொள்ளலாமா?
அதிலென்ன சந்தேகம். எல்லோரிடத்திலும் கலந்துரையாடல் செய்யவில்லை; விவாதிக்கவில்லை. வேட்பாளர் தேர்வில் திறந்த மனதில்லை. பணம் படைத்தவர்களே வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இவை எல்லாமுமே கட்சியின் இப்போதைய நிலைக்குக் காரணம்.
தவெக ஆதரவு நிலைப்பாடு என்பது அதிமுக-வுக்குள் எத்தகைய சூழலை உருவாக்கும்?
தோற்றதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். அதை விடுத்து, திமுக-வுடன் நகர்வதும் தவெக-வுடன் நகர்வதும் தவறான வழிகாட்டல்கள்.