சென்னை, வியாசர்பாடியில் உள்ள கலாம் சபா நூலகம் சார்பில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூலை சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டார். உடன் காவல்துறை ஐஜி சாமுண்டீஸ்வரி, இந்துஸ்தான் விமானவியல் நிறுவன தலைமை மேலாளர் க.செல்வி உள்ளிட்டோர்.
சென்னை: கலாம் சபா நூலகம் ஒரு சமூக இயக்கமாக மாற வேண்டும் என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் இல்லத்தில் ‘கலாம்-சபா’ நூலகம் மற்றும் வழிகாட்டி மையம் செயல்பட்டு வருகிறது. இதை கடந்த 2024-ம் ஆண்டு நவ.8-ம் தேதி, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.
இதன் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசிக்கும் ‘வியாசர்பாடி வாசிக்கிறது’ நிகழ்வு மற்றும் ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு எழுதியுள்ள 10-வது அறிவியல் நூலான ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூலில் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா, வியாசர்பாடியில் நேற்று நடைபெற்றது.
இதில் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பங்கேற்று, ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூலை வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: மாணவர்கள் ஒவ்வொருவரும் தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து, இன்று நாம் என்ன கற்றுக்கொண்டோம் என சிந்திக்க வேண்டும். அப்போதுதான் மேலும் மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும்.
டில்லிபாபு எழுதியுள்ள இந்த நூலில், ராணுவ தொழில்நுட்பங்கள் எப்படி செயல்படுகிறது என எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இதை படிக்க வேண்டும். ஏழை மாணவர்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட இதுபோன்ற கலாம் சபாக்கள் எல்லா இடங்களிலும் திறக்கப்பட வேண்டும் என்றார்.
காவல்துறை ஐஜி சாமுண்டீஸ்வரி பங்கேற்று, கலாம் சபா நூலக தன்னார்வலர்களை கவுரவித்தார். இறுதியில் விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது: மாணவ, மாணவியரின் வெற்றிக்கு வெறும் பாடத்திட்டம் மட்டும் உதவுவதில்லை. மாணவர்கள் வகுப்பறையை தாண்டி வாசிப்பதும், பாடத்திட்டத்தை தாண்டி யோசிப்பதும் அவசியம்.
அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் கலாம் சபா நூலகம் உதவுகிறது. பலர் படித்து முடித்த பிறகு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பார்கள். இந்த கலாம் சபாவை பயன்படுத்துவதன் மூலம் படிக்கும்போதே அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதற்கு தயாராகி விடுகின்றனர்.
கலாம் சபா போன்ற முன்னெடுப்புகளை எடுத்து, அவர்களின் தொடர்புகளை பயன்படுத்தி விரிவான சிந்தனைகளை விதைத்து, இதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். இதை தனிமனித முயற்சியாக இல்லாமல் ஒரு சமூக இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், டில்லிபாபுவின் மனைவியும், இந்துஸ்தான் விமானவியல் நிறுவன தலைமை மேலாளருமான க.செல்வி, டில்லிபாபுவின் தந்தை ச.விஜயகுமார், ஆளுமை சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.