தமிழகம்

சுரங்கத் துறையில் சிறந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக உத்தராகண்ட் மாநிலத்துக்கு மீண்டும் ரூ.100 கோடி ஊக்கத் தொகை

செய்திப்பிரிவு

சென்னை: உத்தராகண்ட் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், சுரங்கத் துறையில் குறிப்பிடத்தக்க செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் மத்திய அரசிடமிருந்து ஊக்கத் தொகையை 2-வது முறையாக பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2025 அக்டோபரில் இம்மாநிலத்துக்கு ரூ.100 கோடி ஊக்கத் தொகை கிடைத்தது. மாநிலத்துக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து ரூ.200 கோடி ஊக்கத் தொகை கிடைத்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் சுரங்க சீர்திருத்தங்களில் உத்தராகண்ட் அரசு கவனம் செலுத்தி, சிறந்த கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சுரங்கத் துறையில் இம்மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. சிறிய கனிம சீர்திருத்தங்கள் தொடர்பான 7 முக்கிய அளவுகோல்களில் 6-ஐ உத்தராகண்ட் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் தெரிவித்துள்ளது.

சுரங்கத் துறையில் புதிய கொள்கைகள் காரணமாக அரசின் வருவாய் அதிகரித்தது மட்டுமல்லாமல், சுரங்க நடவடிக்கைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக, மின்னணு ஏல அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு போன்ற பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT